ஸ்டாலின் அடித்த மெகா சிக்சர்.. இனி ‘காலனி’ என்ற வார்த்தையே நீக்கம்! தீண்டாமையின் அடையாளம் இனி இல்லை
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஆவணங்கள் பொதுப் புழக்கத்திலிருந்து காலனி என்ற சொல் நீக்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உரையாற்றிய அவர்," தமிழ்நாட்டின் ஆதி குடிகள் குறித்து தவறாக சித்தரிக்கும் வகையில் காலனி என்ற சொல் இடம்பெற்றுள்ளது என்றும், ஆதிக்கம் தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் இனி நீக்கப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று காவல்துறை, பிற்படுத்தப்பட்டோர்,சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகள் மற்றும் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.
அப்போது பேசிய அவர்," காலனி என்ற சொல்லை நீக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வம் கோரிக்கை விடுத்து இருந்தார். ஆதிக்கம் தீண்டாமையின் அடையாளமாக இருக்கும் காலனி என்ற சொல் பொது வழக்கத்தில் இருந்து நீக்கப்படும்.

காலனி என்ற சொல் வசை சொல்லாக மாறி இருப்பதால் அரசு ஆவணங்களில் இருந்தும் அது நீக்கப்படும். ஆதிக்குடிகளை இழிவு படுத்துவது போல இந்த சொல் இருக்கிறது. அதனால் இனி அந்த வார்த்தை தமிழகத்தில் புழக்கத்தில் இருந்து தடை செய்யப்படும் என்றார்.
தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். அதில்," ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும். சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கு காவலர் நாளில் விருது வழங்கப்படும். காவலர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை உறுதி செய்யப்படும். ஊட்டி தர்மபுரியில் காவலர் குடியிருப்புகள் அமைக்கப்படும். விழுப்புரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய தீயணைப்பு மண்டலம் உருவாக்கப்படும். மேலும் காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் உறுதி செய்யப்படும். கோவையில் ஐந்து கோடி ரூபாய் செலவில் தீவிரவாத தடுப்பு பிரிவு அமைக்கப்படும். காவல்துறையின் செய்தி மற்றும் ஊடகத்துறையை நிர்வகிக்கும் பொருட்டு புதிதாக ஒரு காவல் ஆய்வாளர் பதவி உருவாக்கப்படும். சென்னைக்கு ஆவடி தாம்பரம் மாநகரங்களை தவிர மற்ற அனைத்து மாவட்ட மாநகரங்களிலும் பிரத்யேக சமூக ஊடக மையங்கள் உருவாக்கப்படும். சென்னை ஆயுதப் படையில் புதிய பணியிடங்களும் 250 காவல் ஆய்வாளர் பணியிடங்களும் உருவாக்கப்படும். காவல்துறைக்கு 350 4 சக்கர வாகனங்களும் 50 நடமாடும் தடயவியல் வாகனங்களும் உருவாக்கப்படும்
சாதி, மதக் கலவரம் இல்லாத அமைதியான சூழல் தமிழகத்தில் உள்ளதாகவும், தமிழகம் அமைதியான மாநிலமாக இருப்பதற்கு காவலர்கள் தான் காரணம். அமைதியான மாநிலத்தில் தான் தொழில் வளர்ச்சி ஏற்படும். தமிழகம் அமைதியான மாநிலமாக இருப்பதற்கு காவலர்கள் தான் காரணம். சட்டம் ஒழுங்கில் கல் விழாதா எனத் துடிப்பவர்கள் எண்ணத்தில் மண்தான் விழுந்திருக்கிறது. சாதி, மதக் கலவரம் இல்லாத அமைதியான சூழல் தமிழகத்தில் உள்ளது. வன்முறை செய்ய வேண்டும் என சிலர் நினைத்தாலும் தமிழக மக்கள் முறியடித்துள்ளனர். குற்றச் சம்பவம் நடந்தால் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது."என்றார்.












Click it and Unblock the Notifications