எங்களை சீண்டினால் நீங்க தாங்க மாட்டீங்க.. எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்! ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: அதிமுக ஊழல் பெருச்சாளிகளை வைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிராக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து முழங்கிவிட்டு போயிருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி கைதான விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 'அடிமை' பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. என்று ஒரு கட்சி இருக்கிறது. அந்தக் கட்சியை தங்களின் கொத்தடிமைகளாக ஆக்குவதற்கு கடந்த 2016, 2017, 2018-ஆம் ஆண்டுகளில் பல்வேறு ரெய்டுகளை இதே பா.ஜ.க. ஆட்சி நடத்தி உள்ளது. ரெய்டு நடத்தினார்களே, எந்த வழக்கையாவது நடத்தினார்களா? குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்களா? தண்டனை வாங்கித் தந்தார்களா? இல்லையே!
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. ரெய்டு நடத்தி குற்றப்பத்திரிக்கையை வரிசையாகத் தாக்கல் செய்து கொண்டு இருக்கிறோம். வழக்குப் பதிவு செய்துகொண்டு இருக்கிறோம். இவற்றில் எல்லாம் விசாரணை நடத்த ஏன் அமலாக்கத்துறை வரவில்லை? எல்லா ஆதாரங்களையும் தருகிறோம். அவர்கள் மீதும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தத் தயாரா? அ.தி.மு.க.வின் இந்த ஊழல் பெருச்சாளிகளைத்தான் டெல்லியில் மொத்தமாகச் சந்தித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவர்தான் ஊழலுக்கு எதிராகத் தமிழ்நாட்டுக்கு வந்து முழங்கி விட்டுப் போயிருக்கிறார்.

அம்மையார் ஜெயலலிதாவுடைய மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வைத் தங்களின் கொத்தடிமைக் கூடாரமாக ஆக்குவதற்கு அமலாக்கத்துறையையும், சி.பி.ஐ.யையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தியது பா.ஜ.க. அவர்களும் பயந்துபோய் பா.ஜ.க.வின் காலடியில் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட 'பாதம் தாங்கி' பழனிசாமி, செந்தில் பாலாஜியைப் பற்றி குறை சொல்கிறார்.
ஆனால், 2021 வரை அவர்கள்தான் ஆட்சியில் இருந்தார்கள். அப்போதெல்லாம் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்கள்? இப்போது வாய்கிழியப் பேசுவோரை அப்போது எது தடுத்தது? 4 ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர்களை உறவினர்களுக்குக் கொடுத்ததாகப் புகார் எழுந்து, உயர்நீதிமன்றத்தால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டவர்தான் பழனிசாமி. உடனடியாக உச்சநீதிமன்றத்துக்குத் தடை வாங்க ஓடிய யோக்கிய சிகாமணிதான் இந்தப் 'பம்மாத்து' பழனிசாமி. அவருக்கு ஊழல் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.
இந்தப் பழனிசாமி அடிமைக் கும்பல் மாதிரி மற்ற கட்சிகளையும் நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. அது நினைக்கிற மாதிரியான கட்சி இல்லை தி.மு.க! உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்கள் இல்லை தி.மு.க.காரர்கள்! சுவரில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கிற மாதிரிதான் ஒவ்வொரு தி.மு.க.காரனும் வளர்க்கப்பட்டிருக்கிறான். நேற்றில் இருந்து சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நிறைய கழக உடன்பிறப்புகள் தலைவர் கலைஞர் பேசிய ஒரு வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள். "என்ன யாரும் அடிக்க முடியாது.. ஞாபகம் வெச்சிக்க.. நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது..." என்று கலைஞர் பேசிய வீடியோ. அதுதான் இப்போது வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்.
எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நாங்கள். எங்களுக்கு என்று தனித்த அரசியல் கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றன. மதவாதம் சாதியவாதம், சனாதனம், பிறப்பால் உயர்வு - தாழ்வு, மேல் - கீழ், இந்த மாதிரியான மனிதசமுதாயத்துக்கு விரோதமான பிற்போக்கு எண்ணங்களுக்கு எதிரானவர்கள் நாங்கள். இந்த சக்திகளை அரசியல் களத்தில் எதிர்கொள்வதுதான் எங்களின் வழக்கம். வாதங்களுக்கு வாதங்கள் வைக்கத் தயாராக இருக்கிறோம். அதை விடுத்து, மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால், குனிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம்.! நேருக்கு நேர் சந்திப்போம்!
நாங்கள் ஆட்சிக்காக மட்டும் கட்சி நடத்துபவர்கள் இல்லை. நாங்கள் கொள்கைக்காகக் கட்சி நடத்துகிறவர்கள். கொள்கைகளைக் காப்பாற்றத்தான் கடைசிவரைக்கும் போராடுவோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறே இதற்கு சாட்சி! ஆதிக்க மனோபாவத்துடன் எதிர்த்தால், கொள்கைப் பட்டாளத்துடன் உறுதியோடு தடுப்போம். இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், மிசா காலம் என, நாங்கள் பார்க்காத அடக்குமுறைகள் இல்லை, நாங்கள் நடத்தாத போராட்டங்கள் இல்லை.
தி.மு.க. நடத்திய போராட்டங்கள் எப்படிப்பட்டது என்று வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இல்லை என்றால் டெல்லியில் இருக்கும் மூத்த தலைவர்களைக் கேட்டுப் பாருங்கள். சீண்டிப் பார்க்காதீர்கள். தி.மு.க.வையோ - தி.மு.க.காரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை!
எனவே, பொறுப்புள்ள ஒன்றிய அரசாங்கத்தை ஆள்கிற பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க., அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். எதேச்சாதிகார நடவடிக்கைகளை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என் உயிரினும் மேலான கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே! உங்களுக்காக நான் இருக்கிறேன். எனக்காக நீங்கள் இருக்கிறீர்கள். 2024 நமக்கான தேர்தல் களம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் நாம் இவர்களைச் சந்திப்போம்!
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் தந்த உள்ளவுறுதி நமக்கு இருக்கிறது. எதையும் தாங்கும் இதயம் உண்டு. இதையும் தாங்கிக் கடந்து செல்வோம்! நாற்பதிலும் வெல்வோம்! நன்றி! வணக்கம்! இவ்வாறு ஸ்டாலின் தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
-
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்? -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. தங்கமணிக்கு எதிராக தாறுமாறாக வியூகம் அமைக்கும் செந்தில்பாலாஜி -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications