பெயர் தான் தர்மேந்திர பிரதான்! ஆனால் அவரிடம் தருமம் என்பதே இல்லை! முதல்வர் ஸ்டாலின் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணி எப்படி ஒற்றுமையாக இருக்கிறது எனச் சிலருக்கு எரிச்சல் இருப்பதாகச் சாடினார். மேலும், புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு திணிக்க முயல்வதாகச் சாடியுள்ள முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார்.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திமுக சார்பில் சென்னையில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

talin DMK

முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "72-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நான் - 75-ஆவது ஆண்டு பவள விழா கொண்டாடிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகப் பணியாற்றி வருவதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை! கருணாநிதி வழித்தடத்தில் தலைவரான பிறகும் உழைத்து வருகிறேன்.. ஓயாமல் உழைக்கும் போது பிறந்த நாள் விழாக்கள் ஒரு ஸ்பீடு பிரேக் போன்றது.. திமுக தலைவர், முதல்வர் பதவி இரண்டும் அண்ணா, கருணாநிதி அமர்ந்த இடம்.

ஓயாமல் உழைத்த தலைவர் கருணாநிதி வழித்தடத்தில், நானும் ஓயாமல் உழைக்கிறேன். தலைவரான பிறகும் உழைக்கிறேன்... முதல்வரான பிறகும் உழைக்கிறேன்! அண்ணாவின் தம்பிக்குக் - கலைஞரின் உடன்பிறப்புக்கு ஓய்வும் இல்லை; சாய்வும் இல்லை என்ற எண்ணத்துடன் உழைக்கிறேன்! அதனால், இதுபோன்ற பிறந்தநாள் விழாக்கள் நெடுஞ்சாலைப் பயணத்தில் வரும் ஸ்பீட்-பிரேக் போல; ஒரு நிமிட ஓய்வு; அவ்வளவுதான்!

வெற்றி விழா மேடை

பிறந்தநாள் விழா மேடையைப் போல் இல்லை, வெற்றி விழா மேடையைப் போல் இருக்கிறது! ஆமாம், இது வெற்றி விழா மேடைதான்! 2019-இல் இருந்து கொள்கைக் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று வரும் நாம், 2026-இலும் அடைய இருக்கும் வெற்றிக்குத் தொடக்க விழா மேடை இது! என்னைச் சந்திப்பவர்கள், 'உங்கள் வெற்றிக்கு எது அடிப்படை?' என்று கேட்டால், எங்களின் தோழமை உணர்வுதான் என்று அனைத்து இடத்திலும் மறக்காமல் பதிவு செய்பவன் நான்! ஏன், தமிழ்நாடு சட்டமன்றத்திலேயேகூட பதிவு செய்திருக்கிறேன்!

கூட்டணியில் விரிசல் இல்லை

கருத்தியல் கூட்டணி அமைத்திருக்கும் எங்களுக்குள் கருத்து மாறுதல் வரும். ஆனால், விரிசல் வராது! எங்களின் ஒற்றுமையை எரிச்சலுடன் பார்த்து, விரிசல் வருமா என்று சிலர் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கலாம்... அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, உங்களின் ஆசையில்தான் மண் விழுமே தவிர; எங்கள் கூட்டணியில் விரிசல் விழாது!

தோழமைக் கட்சித் தலைவர்களே... என்னை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்தவர்கள் நீங்கள். உங்களை எப்போதும் என்னுடைய இதய நாற்காலியில் நான் உட்கார வைத்திருக்கிறேன்! உங்களுக்கு நான் உறுதியோடு சொல்லிக் கொள்கிறேன்... நம்முடைய ஒற்றுமைதான், தமிழ்நாட்டைக் காப்பாற்றியிருக்கிறது! தமிழைக் காப்பாற்றியிருக்கிறது! சமூகநீதியைக் காப்பாற்றியிருக்கிறது! சகோதரத்துவத்தைக் காப்பாற்றியிருக்கிறது! ஒற்றுமையைக் காப்பாற்றியிருக்கிறது! ஏன், ஒட்டுமொத்த இந்தியாவையே காப்பாற்றியிருக்கிறது!

அதிமுக

நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்... 2021-இல் தப்பித்தவறி அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருந்தால், இன்று தமிழ்நாடு தரைமட்டத்துக்குச் சென்றிருக்கும்! தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளும் அ.தி.மு.க. கொத்தடிமைகளால் அடகு வைக்கப்பட்டிருக்கும்! அ.தி.மு.க.-வை மிரட்டிப் பணிய வைத்து, அவர்கள் கட்சியையும் - தமிழ்நாட்டையும் கபளீகரம் செய்திருக்கும் பா.ஜ.க.! இந்தக் கொடிய சக்திகளிடம் இருந்து, தமிழ்நாட்டை மீட்ட கூட்டணி, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி! இன்றைக்கு, இந்தியாவுக்கு வழிகாட்டும் கூட்டணியும் நமது கூட்டணிதான்! தமிழ்நாட்டை மற்ற மாநில மக்கள் எல்லாம், வியந்து பார்க்குற வகையில் திராவிட மாடல் ஆட்சியைச் சிறப்பாக நடத்தி வருகிறோம்.

இதை ஒன்றிய பா.ஜ.க. அரசால், தாங்கிக் கொள்ள முடியவில்லை! நம்முடைய மாநிலத்துக்கான எந்த நன்மையையும் செய்வது இல்லை! பிறகு, என்ன செய்கிறார்கள்? எப்படியெல்லாம் தமிழ்நாட்டை வஞ்சிக்கலாம் என்று பார்த்து பார்த்துச் செய்கிறார்கள்... நீட் தேர்வைத் திணித்தார்கள். புயல் - வெள்ளம் என்று பேரிடர் வந்தால், நிதி கொடுப்பதில்லை! இப்படி தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்!

புதிய கல்வி கொள்கை

இப்போது சமீப காலமாக, தமிழ்நாடு எதனால் முன்னணியில் இருக்கிறது என்று பார்த்தவர்கள், கல்வியால்தான் இவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு, அந்தக் கல்வியைச் சீர்குலைக்க, தேசிய கல்விக் கொள்கையைத் திணித்தால் இவர்கள் கீழே சென்றிடுவார்கள் என்று நினைத்தார்கள்... ஆனால், நாம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை! அதனால் உடனே நிதி தரமாட்டோம் என்று சொல்கிறார்கள்... நான் வேதனையோடு சொல்கிறேன், பள்ளிக் குழந்தைகள் - ஆசிரியர்களுக்காகச் சம்பளம் தர்ற நிதியில் கூட, கைவைக்கும் அளவுக்குக் கொடூரமானவர்கள் கையில் இந்தியா சிக்கியிருக்கிறது!

தருமமே இல்லை

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்ன சொல்கிறார்? "தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்றுக் கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நிதி ஒதுக்கச் சட்டத்தில் இடமில்லை" என்று மிரட்டுகிறார்! நான் கேட்கிறேன், எந்தச் சட்டத்தில் இப்படி இருக்கிறது? மும்மொழிக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறதா? இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமா அது? உங்களுக்கு ஒரு நீட் தேர்வையே குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காத வகையில் நடத்தத் தெரியவில்லை. நீங்கள் தமிழ்நாட்டுக்கு அட்வைஸ் செய்கிறீர்களா? பெயர்தான் தர்மேந்திர பிரதான்! ஆனால், தருமமே உங்களிடம் இல்லையே!?

நம்முடைய குழந்தைகளின் கல்விக் கனவைச் சிதைக்கும் காரியத்தை தர்மேந்திர பிரதான் செய்ய, அதைக் கண்டிக்காமல், தடுத்து நிறுத்தாமல், பிரதமர் மோடி வேடிக்கை பார்க்கிறார். இதுதான் ஒரு பிரதமருக்கு அழகா? பிரதமரே, இந்தியை எங்கள் மேல் திணிக்காதீர்கள்... எங்களுக்குத் தாய்மொழியான தமிழும் - உலகத்துடன் தொடர்பு கொள்ள ஆங்கிலமும் போதும்... தேவைப்பட்டால் இந்தி என்ன? கிரேக்கம் - இலத்தீன் மொழிகளைக்கூட அறிவியல் - தொழில்நுட்பம் மூலம் கற்றுக்கொள்ளப் போகிறோம்...

இரு மொழி கொள்கை

எனவே, எங்களை என்ன மிரட்டினாலும், உங்களால் இந்தி மொழியைத் திணிக்க முடியாது! மிரட்டினால், அஞ்சி நடுங்கிக் கூழைக்கும்பிடு போடுவதற்கு, அ.தி.மு.க. என்ற நினைத்தீர்களா? இது தி.மு.க.! மிரட்டினால், அடங்கிப் போகிறவர்கள் இல்லை; அடக்க நினைப்பவர்களை அடங்கிப் போக வைப்பவர்கள்! தமிழ்நாட்டுக்காகவும், தமிழ்மொழிக்காகவும் எத்தகைய அடக்குமுறையையும் எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர்கள் நாங்கள்! இங்கு இருக்கும் நாங்கள் தமிழர்கள்! சுயமரியாதையுள்ள திராவிடர்கள்!

ஒன்றிய அரசு இப்போது என்ன நினைக்கிறார்கள்? இப்படி அறிவுப்பூர்வமாக - முற்போக்குச் சிந்தனையுடன் பேசுகிறார்களே! இங்கு மட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் முழங்குகிறார்களே! இவர்களை எவ்வாறு தடுக்கலாம் என்று பார்த்தார்கள்... அதற்குத்தான், இப்போது தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வரப்போகிறார்கள்! நம்முடைய தொகுதிகளின் எண்ணிக்கையை - நம்முடைய பிரதிநிதித்துவத்தைக் குறைக்க நினைக்கிறார்கள்... அதனால்தான் முன்கூட்டியே இந்தப் பிரச்சினையை நாம் இப்போது கையில் எடுத்து இருக்கிறோம்.

தொகுதி மறுசீரமைப்பு

ஏற்கெனவே, பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தபோது, என்ன சொன்னார்? எதிர்காலத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகமாகப் போகிறது என்று பேசினார்... ஒன்றிய உள்துறை அமைச்சர் என்ன சொன்னார்? மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவந்தபோது, 2024 தேர்தலுக்குப் பிறகு தொகுதி மறுவரையறை இருக்கும் என்று சொன்னார். நாம் இப்போது கேள்வியெழுப்பிய பின்னர், இப்போது என்ன சொல்கிறார்கள்? பொத்தாம் பொதுவாக, தமிழ்நாட்டுக்குத் தொகுதிகள் குறையாது என்று சொல்கிறார்கள்! மற்ற மாநிலங்களுக்கு அதிகரிப்பார்களா? தெரியாது!

நாங்கள் கேட்கும் கேள்வி, நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? "மற்ற மாநிலங்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் அதிகரிக்காது" என்று ஏன் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்? முன்னாள் பிரதமர்கள் நேரு அவர்களும் - வாஜ்பாய் அவர்களும் உறுதி கொடுத்தது போன்று, பிரதமர் மோடி ஏன் உறுதி கொடுக்க மாட்டேன் என்கிறார்?

அனைத்து கட்சி கூட்டம்

இது தொடர்பாக ஆலோசிக்க மார்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நான் அழைப்பு விடுத்திருக்கிறேன்... அதில் கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்... பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. கலந்து கொள்ளும் என்ற செய்தி வந்திருக்கிறது. மகிழ்ச்சி! சிலர், கலந்து கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள்... நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம், இன்றைக்கு பா.ஜ.க.வை மகிழ்விக்க நீங்கள் செய்யும் சுயநல அரசியலால் தமிழ்நாட்டுக்குத் தீங்குதான் ஏற்படும்! பா.ஜ.க.வை நம்பி சென்றவர்கள், அவர்களின் தேவை தீர்ந்தவுடனே மற்ற மாநிலங்களில் என்ன ஆனார்கள் என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+