நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்
சென்னை: தஞ்சை பிரசாரக் கூட்டத்தில் நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் தங்கள் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? என்று நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நெல்லுக்கு அளித்து வரும் ஊக்கத்தொகையை நிறுத்துமாறு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதனை மறுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு என்பது தெளிவாகிறது.

தமிழகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட தகவல், மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனையே ஆகும். மத்திய அரசின் இந்த ஆலோசனை, பயிர் பல்வகைப்படுத்துதலை (Crop Diversification) ஊக்குவித்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுயசார்பு அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்குப் பார்வையாகும்.
அதிகாரத்தை பறிக்கவில்லை
இதன் மூலம், உள்நாட்டுத் தேவை அதிகமாக உள்ள பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து, அதிக லாபத்தைப் பெற வழிவகை செய்யப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் தேச நலனில் அக்கறை கொண்டு ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, தங்களின் குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்திற்காகத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது. அரசியலமைப்புச் சட்டப்படி உயர் பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சருக்கு இத்தகைய நடத்தை அழகல்ல. தமிழக விவசாயிகள் தங்கள் கவலைகளையே வாக்குகளுக்காக ஆயுதமாக்கும் அரசை அல்ல, மாறாக தங்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக உழைக்கும் அரசையே எதிர்பார்க்கிறார்கள்.
ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு விவசாயிக்காகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசு சோர்வின்றித் தொடர்ந்து பணியாற்றும். இத்தகைய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிரச்சனைகளால் நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது. கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கேள்வி
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: நிர்மலா சீதாராமன் அவர்களே, "நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்" எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது. கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.
எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள். தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications