கல்வீச்சில் ஜெகன்மோகன் ரெட்டி காயம்.. விரைந்து குணமாக பிரதமர் மோடி வாழ்த்து.. கண்டித்த ஸ்டாலின்
சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது கல்வீச்சில் முகத்தில் காயமடைந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விரைந்து குணமாக பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் கல்வீச்சு சம்பவத்தை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி இன்று விஜயவாடாவில் தேர்தல் பிரசாரம் செய்தார், அங்கு சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் ஒன்றாக நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 13ம் தேதி இரண்டு தேர்தல்களும் ஒன்றாக நடைபெற இருக்கிறது.

இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி பேருந்து மூலம் மாநிலம் முழுவதும் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் இன்று இரவு ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் பிரசாரம் செய்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்து அவரை நோக்கி கல்வீசப்பட்டது. இதில் அவர் காயமடநை்தார். இடது புருவத்தில் வெட்டுக்காயமடைந்தார். இந்நிலையில் தான் அரசியல் கட்சி தலைவர்கள் ஜெகன்மோகன் ரெட்டியின் மீதான கல்வீச்சு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ஜெகன் மோகன் ரெட்டி விரைந்து குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஜெகன்மோகன் ரெட்டி விரைந்து குணமடைந்து பூரண நலம்பெற பிரார்த்தனை செய்கிறேன்'' என தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலினும், ஜெகன்மோகன் ரெட்டி விரைந்து குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு கல்வீச்சு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்ட சம்பவத்தை கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகள் எப்போதும் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும்போது நாகரீகத்தையும், பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்ட வேண்டும். காயமடைந்த ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications