“ஓட்டுக்காகத்தான் தமிழ் பற்றி பேசுறீங்க.. உள்ளே இந்தி ஆதிக்க வெறி”.. முதல்வர் ஸ்டாலின் தாக்கு!
சென்னை: ஓட்டுக்காக உதட்டளவில் தமிழை உச்சரித்து, உள்ளமெங்கும் ஆதிக்க மொழியுணர்வு கொண்டு செயல்படுகிறது மத்திய பாஜக அரசு என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் பேசுபவர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்த மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. தமிழுக்கும், சமஸ்கிருதத்திற்கும் ஒன்றிய பாஜக ஒதுக்கும் நிதியில் உள்ள வேறுபாடே அவர்கள் தமிழ்ப் பகைவர்கள் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டிவிடும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு எதிராக, திமுக தொண்டர்களுக்கு தொடர் கடிதம் எழுதி வருகிறார் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அந்த வகையில் 'மொழி சமத்துவமே திமுகவின் இலட்சியம்' எனக் குறிப்பிட்டு 8வது மடலை எழுதி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அந்த மடலில், "நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் ஆதிக்க மொழிகள் எதிர்ப்பு குறித்த எட்டாவது மடல்.
இந்தி நம் நாட்டின் தேசிய மொழி என்றும் அதனை யாரும் புறக்கணிக்கக் கூடாது என்றும் பா.ஜ.கவினரும் அவர்களின் கொள்கை வழி அமைப்பினரும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற மக்களவையின் தலைவர் ஓம் பிர்லா அவர்கள் சமஸ்கிருதம்தான் பாரதத்தின் மூலமொழி என்று, அவையிலேயே குறிப்பிடுகிறார். இவை இரண்டுமே தவறான பரப்புரையாகும். இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிதான் இந்தி. அத்துடன் ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாக இருக்கிறது.
இந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறானது. இந்திய ஒன்றியம் என்பதே பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களைக் கொண்டதாகும். இதனை இந்திய விடுதலைக்கு முன்பே காந்தியடிகள் நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான் மாகாண காங்கிரஸ் கமிட்டிகளை அந்தந்த மாநிலத் தாய்மொழிகளின் பெயரில் அமைத்தார். இந்தியா விடுதலை அடைந்தபிறகு, பிரதமர் ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்திருந்த ஒன்றிய அரசு, மாகாணங்களை மொழிவழி மாநிலங்களாகப் பிரிப்பதற்காக மாநில புனரமைப்புக் குழுவினை அமைத்தது. அந்தக் குழுவிடம் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தனது கருத்துகளை அளித்தது.
தமிழ் மீது பிரதமர் மோடி மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார் என்றும், மாநில மொழிகளின் வளர்ச்சிக்காகத்தான் மும்மொழிப் பாடத்திட்டத்தை வலியுறுத்துகிறோம் என்றும் சொல்கின்ற பா.ஜ.கவினர் தங்கள் ஆட்சியில் தமிழுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்? சமஸ்கிருதத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்? என்ற வேறுபாடே, அவர்கள் தமிழ்ப் பகைவர்கள் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டிவிடும்.
ஒன்றிய கல்வி அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலகட்டத்தில் மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2,435 கோடி. இதே காலகட்டத்தில் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கியது ரூ.167 கோடி மட்டுமே. சமஸ்கிருதத்திற்கு செலவிடப்பட்டதில் 7 விழுக்காடு மட்டுமே தமிழுக்கு செலவிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திற்கும் இந்திக்கும் முன்பைவிட பல மடங்கு பணம் ஒதுக்கப்பட்டு, செலவிடப்பட்டு வருகிறது.
ஓட்டுக்காக உதட்டளவில் தமிழை உச்சரித்து, உள்ளமெங்கும் ஆதிக்க மொழியுணர்வு கொண்டு செயல்படுகிறது ஒன்றிய அரசு. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் பேசுபவர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்த முயற்சிக்கிறது. தமிழ்நாட்டுக்குரிய நிதியைத் தராமல் வஞ்சிப்பது போலவே தமிழுக்குரிய நிதியையும் ஒதுக்காமல் ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழைப் போலவே இந்தியாவின் பிற மாநில மொழிகளையும் ஆதிக்க மொழிகளைக் கொண்டு அழிக்கத் துடிக்கிறது. மொழித் திணிப்பு ஒரு நாட்டில் எத்தகைய விளைவுகளை உண்டாக்கும் என்பதை உலக சரித்திரத்தைப் புரட்டினால் புரிந்து கொள்ளலாம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications