ஆசிரியருக்கு ஒரு பத்திரிகை; மாணவருக்கு 2 இதழ்கள்- இதிலும் தமிழ்நாடுதான் முன்னோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கையில் பிடி, கதைகள் படி' என்ற அறிவிப்புடன் வெளிவந்திருக்கிறது 'தேன்சிட்டு' மாதம் இருமுறை சிறார் இதழ். இதனைத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

திமுக அரசு பதவியேற்றதிலிருந்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியான மாற்றங்களைப் பெற்றுள்ளது. அதனை அதிரடி என்பதைவிட ஆரோக்கியமான மாற்றம் என்று சொல்வதே சரியானதாக இருக்கும்.

அரசுப் பள்ளிகளின் முகத்தை மாற்றிய முதல்வர் ஸ்டாலின்:

அரசுப் பள்ளிகளின் முகத்தை மாற்றிய முதல்வர் ஸ்டாலின்:

கடந்த ஆண்டு டெல்லி சென்று அரசுப் பள்ளிகளைப் பார்வையிட்டு வந்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள பள்ளி வகுப்பறைகளின் முகத்திற்கு முற்றிலும் புதிய தோற்றத்தை ஏற்படுத்தித் தந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வகுப்பறைகள் வெறும் பாடசாலைகளாக இல்லாமல் கலைத் திருவிழாக்களின் களமாகக் காட்சி மாறியது. 'வானவில் மன்றம்', 'எண்ணும் எழுத்தும்' 'நான் முதல்வன்' எனப் பல்வேறு திட்டங்கள் செயல்வடிவம் பெற்றன.

இப்போது படிப்பாளியாக மட்டும் பள்ளி மாணவர்கள் இருந்தால் போதாது படைப்பாளியாகவும் மாற வேண்டும் என்ற நோக்கில் மூன்று இதழ்களை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்காக 'தேன்சிட்டு', 'புது ஊஞ்சல்' ஆகிய இதழ்கள். அதற்கும் ஒருபடி மேலே சென்று ஆசிரியர்களுக்காக 'கனவு ஆசிரியர்' என்ற பத்திரிகையைப் பள்ளிக் கல்வி வெளியிட்டுள்ளது.

இந்தப் பருவ இதழ்கள் இதுவரைப் பள்ளிக்கூடங்கள் பார்க்காதவை. ஆசிரியருக்கு என்று தனிப் பத்திரிகையை வெளியிட்டதில் இந்திய அளவில் தமிழ்நாடுதான் முன்னோடி.

ஆக, அத்தனை மாற்றங்கள் குறித்து அலசுகிறார்கள் சில கல்வியாளர்கள். களப்பணியாளர்கள். முதலில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பேசினார். அவர், "பொதுவாக நல்ல ஒருங்கிணைப்பாளனாகச் செயல்படுபவை இதழ்கள். இதில் குழந்தைகளுக்குத் தெரியாத பலதகவல்கள் உள்ளன. அவை அனைத்தும் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள். அறிவியல் கண்டுபிடிப்பு பற்றி செய்திகள் எல்லாம் இதழில் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது.

கேள்விகள் தோன்றினால்தான் கற்றல் திறன் வளரும்:

கேள்விகள் தோன்றினால்தான் கற்றல் திறன் வளரும்:

இந்தப் பருவ இதழில் குழந்தைகளே நிறையக் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார்கள். ஓவியம் வரைந்துள்ளார்கள். முக்கியமாக 'கனவு ஆசிரியர்' என்ற பகுதியில் ஆசிரியர்கள் பலர் தங்களின் வகுப்பறை நடைபெற்ற சோதனை முயற்சிகளை எழுதி வருகிறார்கள். அந்தப் பகுதி நல்ல அனுபவத்தை வழங்கக் கூடியதாக இருக்கிறது" என்கிறார்.

அடுத்ததாகக் கல்வியாளர் வசந்தி தேவி, "தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சிறந்த மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான பல முயற்சிகளைச் செய்துவருகிறது. அதில் சிறப்பான திட்டம்தான் பள்ளிக்கல்வி சார்பாகப் பருவ இதழ்களை வெளியிட்டுவருவது. பள்ளிக் குழந்தைகளின் கலை அறிவை வளர்க்கக் கூடிய வகையில் 'தேன்சிட்டு' மற்றும் 'புது ஊஞ்சல்' ஆகிய இரு இதழ்களை வெளியிடுகிறார்கள். அதேபோல் ஆசிரியர்களுக்காகவே 'கனவு ஆசிரியர்' என்ற இதழை வெளியிடுகிறார்கள்.

கல்வி என்பது அறிவுத்தேடலை உருவாக்கவேண்டும். கேள்விகளை மனதிலே விதைக்கவேண்டும். தங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் தங்களைச் சுற்றி உள்ளவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் உலக அறிவை இருந்த இடத்திலேயே இருந்து பெறுவதற்கு, ஆர்வத்தைத் தூண்டுவதற்கு முதல் படியாக இந்தப் பத்திரிகைகள் அமைந்துள்ளன.

கல்வி என்பது முதலில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பிறகு வாசிக்கும் திறனை அதிகப்படுத்த வேண்டும். பின் அதை அனுபவித்துப் பகிர்ந்துகொள்ள வைக்கவேண்டும். அதன் வழியேதான் தோழமை பிறக்கும். கேள்விகள் பல பிறக்கும். அறிவாற்றல் பெருகும். அதற்கு இந்த மூன்று பத்திரிகைகள் பலவிதங்களில் உதவிபுரியும் என நான் நம்புகிறேன்" என்கிறார்.

இந்தத் 'தேன்சிட்டு' இதழில் காகிதம் வெட்டும் கலை பயிற்றுவிக்கப்படுகிறது. காகிதங்களை வைத்துப் பல பறவைகளைத் தயாரிப்பது, விலங்குகளைப் போலச் செய்வது எனப் பல பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதைப்போலப் பள்ளிக் குழந்தைகள் பூக்களின் வகைகளை அறிந்துகொள்ளும் விதத்தில் 'பூக்கள் பலவிதம்' பகுதியை வடிவமைத்துள்ளனர்.

சொற்களை வைத்து உருவான புதிர் போட்டிகள்:

சொற்களை வைத்து உருவான புதிர் போட்டிகள்:

சொற்கள் குறித்து அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும்வகையில் உள்ளது 'இணைப்புச் செற்கள்' பகுதி. குறிப்பிட்ட சொற்களில் சில எழுத்துகளை அகற்றிவிட்டு அதன் இடையே வெற்றிடம் விட்டுள்ளனர். அர்த்தம் தவறாத வகையில் அந்தச் சொற்களில் விடுபட்டுள்ள எழுத்துகளை நிரப்பும் போது ஒரு புதிர் போட்டிக்கான உற்சாகத்தைப் பிள்ளைகள் பெறுகிறார்கள்.

இவை தவிர விடுகதைகள், சுட்டிக் கதைகள் எனப் பல பகுதிகள் குழந்தைகளுக்காக இடம்பெற்றுள்ளன.

"இந்த இதழில் சிறப்பு என்னவென்றால் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளைத் தாங்கி வருவதுதான். ஒருசேர இருமொழி ஆற்றலை வளர்க்க இந்த இதழ் பெரிய அளவில் உதவும். இன்றைக்கு வகுப்பறையில் பாடத் திட்டங்களை மட்டும் கற்கும் மாணவச் செல்வங்கள் வகுப்பறைக்கு வெளியே பத்திரிகை படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவே முடியாத சூழலில் உள்ளனர். ஆகவே, அந்த இடைவெளியை இந்தப் பருவ இதழ்கள் கட்டாயம் இட்டு நிரப்பும்" என்கிறார் தலைமை ஆசிரியர் பரமேசுவரி

'கனவு ஆசிரியர்' இதழ் குறித்துப் பேசிய ஆசிரியர் குணசேகரன், "இன்றைக்குக் கல்விமுறை உலக அளவில் மாறிவிட்டது. ஆகவே பழைய முறைகளில் ஒரு ஆசிரியனாக என்னால் பாடம் நடத்த முடியாது. புதிய அணுகுமுறையை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதை இந்த மாத இதழ் எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறது.

மேலும் கல்வி சார்ந்த அனைத்துவித தகவல்களையும் கொண்டுவந்து நம் கண்முன்னால் கொட்டிக் கொடுத்துள்ளது. வேறு எங்கும் நாம் தேடி அலையத் தேவை இல்லை. நம் உள்ளங்கையில் இந்தப் பருவ இதழ் கொண்டுவந்த தரும் செய்திகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன" என்கிறார்.

உலகைப் பற்றி நூல் எழுதிய 10வயது சிறுவன்:

உலகைப் பற்றி நூல் எழுதிய 10வயது சிறுவன்:

கேரளாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஸாக் சங்கீத் (Zac Sangeeth) என்பவர் world history in 3 points என்று ஒருநூலை எழுதி இருக்கிறார். அதில் உலகத்தைப் பற்றி மூன்றே விஷயங்களை மட்டுமே கூறியிருக்கிறார். அந்தப் புத்தகம் பற்றி 'தேன்சிட்டு' இதழில் இடம்பெற்றுள்ள செய்தி தனக்கு உற்சாகம் தருவதாக இருந்தது என்கிறார் அரக்கோணம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவரும் சங்கீதனா. இந்தச் சிறுவனைப் போலவே வருங்காலத்தில் தானும் ஒரு நூலை எழுத விரும்புவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

இந்த இதழ்கள் குறித்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "மூன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு 'ஊஞ்சல்' என்ற இதழைத் தயாரித்துள்ளோம். 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையான மாணவர்களை மனதில் கொண்டு 'தேன்சிட்டு' என்ற இதழைத் தயாரித்துள்ளோம். இதைவிட இந்தியாவிலேயே ஆசிரியர்களுக்கு என 'கனவு ஆசிரியர்' என்ற இதழைக் கொண்டுவந்துள்ளோம்" என்கிறார்.

இந்தப் பருவ இதழ்களில் பள்ளி மாணவர்கள் வெறும் கதை, கட்டுரை,கவிதை, ஓவியம் எனப் படைப்பாற்றலை மட்டும் வளர்த்துக் கொள்வதற்காக எழுதவைக்கப்போவதில்லை. வரும் காலங்களில் படைப்பு ஆளுமையில் சிறந்து விளங்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை இந்தப் பருவ இதழின் ஆசிரியர் குழுவில் அமர்த்த உள்ளனர்.

மேலும் அவர்களுக்காக 'மாணவர் எழுத்தாளர் திட்டம்' என்ற ஒன்றை உருவாக்கித் தர உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

வானம் ஏன் நீலநிறத்தில் உள்ளது. மெழுகுவத்தி அணைவது ஏன்? என்ற அறிவியல் கட்டுரைகள் மிக எளிமையாகப் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. அதேபோல சி.சு.செல்லப்பா, அழ.வள்ளியப்பா போன்ற மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

இவைத் தவிரக் குழந்தைகள் உண்ணவேண்டிய உணவுகளில் என்னென்ன சத்துகள் கலந்துள்ளன என்பதைக் கூட படம் போட்டுத் தெளிவாக மாணவர்களுக்குப் புரியவைத்துள்ளனர். 'புது ஊஞ்சல்' இதழைப் பொறுத்தளவில் இன்னும் எளிமையாகக் குட்டிக் கதைகளுடன் தகவல்கள் விளக்கப்பட்டுள்ளன.

'கனவு ஆசிரியர்' இதழில் 'பரிசு வென்ற பசுமைப் பள்ளி' என்ற செய்தி மனதை ஈர்க்கும்படி உள்ளது. ஆசிரியர்கள் என்ன மாதிரியான புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஒரு அறிமுகப் பகுதி தேவையான ஒன்றாக உள்ளது. வகுப்பறையில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான தன்மையில் இருக்கமாட்டார்கள். சில மாணவர்கள் சுட்டியாகச் சுறுசுறுப்பாகவும் இருப்பர்.

உள்முக மாணவர்கள் மீதான அரசின் அக்கறை:

உள்முக மாணவர்கள் மீதான அரசின் அக்கறை:

ஆனால் அதற்கு மாறாக மற்ற மாணவர்கள் 'உம்' என்று அமைதியாக அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருப்பர். இவர்களை உள்முக மாணவர்கள் என்கிறார். இவர்களை எப்படி ஆசிரியர்கள் புரிந்துகொண்டு நடத்த வேண்டும் என 10 ஆலோசனைக் குறிப்புகளை வெளியிட்டுள்ளனர். பயன்தரும் நல்ல கட்டுரையாக இது அமைந்துள்ளது.

அதைப்போலவே இந்தியாவில் கற்றுத்தரப்படும் கல்விமுறைக்கும் சீனாவில் உள்ள கல்விமுறைக்கும் என்ன மாதிரியான வேறுபாடு உள்ளது என்பதை விளக்கும் கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இப்படியான கட்டுரையை வாசிப்பதன் மூலம் ஒரு உலகளாவிய கல்விமுறையைக் கற்றுக் கொள்ள முடியும். கற்றல் சார்ந்த புரிதலும் ஆசிரியருக்கு அதிகரிக்கும். இப்படி ஒவ்வொரு பகுதியையும் திட்டமிட்டு வடிவமைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+