சீனியர் தலைகளுடன் அண்ணா அறிவாலயத்தில் இன்று அவசர ஆலோசனை.. நாளை அமெரிக்கா பறக்கும் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அமெரிக்கா செல்ல இருக்கும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். தான் தமிழ்நாட்டில் இல்லாத நாட்களில் கட்சி பணிகளை ஒருங்கிணைப்பது பற்றி கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்டோருடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டை வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதற்கான முயற்சிகளில் அமைச்சர்கள், அதிகாரிகளை ஈடுபடுத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 ஆண்டுகளில் துபாய், அபுதாபி, லண்டன், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குச் சென்று, முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் இந்த முதலீட்டாளர்கள் ஈர்ப்பு பயண வரிசையில் அடுத்ததாக அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா புறப்பட்டுச் சென்று அங்கே 17 நாட்கள் தங்கியிருந்து முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார். இந்த பயணத்தின் போது சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ நகரங்களில் உலகின் முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின், ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரையில் சான் பிரான்சிஸ்கோ நகரில் முன்னணி நிறுவன தலைவர்களை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின். முதல்வரின் இந்த பயணத்தில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
ஆகஸ்ட் 29 ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டார்கள் மாநாட்டில் பங்கேற்று பேச உள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆகஸ்ட் 31 ஆம் தேதி அமெரி்க்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களையும், தொழிலதிபர்களையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலின் உடன் இந்த பயணத்தில் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் செயலாளர்கள், தொழில் துறை செயலாளர் மற்றும் பல்வேறு உயரதிகாரிகள் உடன் செல்ல உள்ளனர்.
நாளை அமெரிக்கா புறப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அமெரிக்கா புறப்படுகிறார். இந்நிலையில் கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பது, தொய்வின்றி மேற்கொள்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான் தமிழ்நாட்டில் இல்லாத நாட்களில் கட்சி பணிகளை ஒருங்கிணைப்பது பற்றி மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி உள்ளிட்டோருடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications