அவங்க அப்படித்தான் பேசுவாங்க.. அமைதியா இருக்கணும்.. ‘அலர்ட்’.. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்!
திமுக எம்.எல்.ஏக்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை : முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது கட்சி எம்.எல்.ஏக்களுக்கும், அமைச்சர்களுக்கும் முக்கிய அட்வைஸ் கொடுத்துள்ளார். எதிர்க்கட்சிகள் என்றால் விமர்சிக்கத்தான் செய்வார்கள் என்றும் அப்போது திமுக எம்.எல்.ஏக்கள் எல்லை தாண்டி பேசக்கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என அட்வைஸ் கொடுத்தார்.
மேலும் சட்டப்பேரவையில் தேவையற்ற புகழ்ச்சி உரைகள் வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதையடுத்து, நாளை (மார்ச் 23) முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. வரும் மார்ச் 28ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. பின்னர், மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

ஸ்டாலின் ஆலோசனை
இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நாங்க பார்த்துக்குறோம்
இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். அவர்கள் விமர்சிக்கும்போது ஆவேசப்படக்கூடாது. அமைதியாக இருக்க வேண்டும். ஆளுங்கட்சி என்ற அடிப்படையில் நாம் சட்டப்பேரவை மாண்பை காப்பாற்ற வேண்டும். எதிர்க்கட்சியினருக்கு நானும், மூத்த அமைச்சர்களும் பதில் சொல்லிக் கொள்கிறோம். மற்றவர்கள் பதிலடி கொடுக்கிறோம் என்று வீணாக பிரச்சனையை வளர்க்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர்கள் ரெடியா வாங்க
மேலும், எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டமன்றத்தின் நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். என்ன பேசுகிறோம் என்பதை தெளிவாக பேச வேண்டும். மானியக் கோரிக்கை விவாதங்களில் யார் யார் பேச வேண்டும் என்பது குறித்து முடிவு செய்துள்ளோம். அதன்படி முன்கூட்டியே தெரிவிக்கப்படும். அமைச்சர்களும் தங்கள் துறையைப் பற்றிய எந்தக் கேள்விகளையும் எதிர்கொள்ளும் வகையில் விவரங்களை சரியாக வைத்துக் கொண்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

திட்டங்கள்.. உஷாரா இருக்கணும்
மேலும், பட்ஜெட்டில் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழிகாட்டுல்கள் விரைவில் வெளியிடப்படும். எம்.எல்.ஏக்கள் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை முழுமையாக வாசித்து அறிந்து கொள்ளுங்கள். திட்டங்கள் குறித்து தவறுதலாக ஏதாவது பேசிவிட்டால் அதனையே பூதாகரமாக்கி விடுவார்கள், எனவே கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகழாதீங்க
மேலும், உங்கள் தொகுதி நிதியை சரியாக பயன்படுத்தி அரசுத் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர உதவ வேண்டும். காலையில் மட்டுமின்றி மாலையில் நடக்கும் பேரவைக் கூட்டத்திலும் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் ஆதாரங்களோடு புள்ளிவிவரங்களுடன் தெளிவாக பேச வேண்டும். சட்டமன்றத்தில் தேவையற்ற புகழ்ச்சி உரைகளைப் பேச வேண்டாம், அது மக்கள் மத்தியில் அதிருப்தியைத்தான் கொடுக்கும் என்றும் கண்டிப்பான ஆர்டரை போட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications