மழைநீர் வடிகால் பணிகள்! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்! வீட்டு வாசலில் நின்று வரவேற்ற மக்கள்!
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது வீட்டுவாசலில் நின்று தன்னை வரவேற்ற பொதுமக்களை அருகில் சென்று சந்தித்து பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்.
இதனிடையே வழக்கம் போல் முதல்வர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள பலரும் ஆர்வம் காட்டினர்.

வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழையால் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிடவும், நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக, சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளிலிருந்து நிரந்தர தீர்வு காணும் வகையில் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திருப்புகழ் தலைமையில் வெள்ள மேலாண்மை குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

நேரில் ஆய்வு
மேலும், வருகின்ற பருவமழைக் காலங்களில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் கடந்த ஆண்டுகளில் அதிக அளவில் நீர் தேங்கிய இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகளை உடனடியாக தொடங்கிட உத்தரவிட்டார். அதனடிப்படையில், முதலமைச்சர் இன்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம் மண்டலம், வார்டு-58, வேப்பேரி நெடுஞ்சாலையில் 750 மீட்டர் நீளத்திற்கு 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.

எந்தெந்த பகுதிகள்
இதேபோல் திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு - 73, புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் 790 மீட்டர் நீளத்திற்கு 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், வார்டு-74, பெரம்பூர் நெடுஞ்சாலை தெற்குப் பகுதியில், 880 மீட்டர் நீளத்திற்கு 3 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், மயிலாப்பூர் இரயில்வே நிலையம் அருகில், வார்டு-126, ராமாராவ் சாலையில் 500 மீட்டர் நீளத்திற்கு 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும்; தேனாம்பேட்டை மண்டலம், வார்டு - 123, தேவநாதன் தெருவில் 300 மீட்டர் நீளத்திற்கு 73 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பருவமழைக் காலம்
இந்த ஆய்வின் போது, முதலமைச்சர் ஸ்டாலின் வருகின்ற பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்நிகழ்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், தாயகம் கவி, மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஸ்டாலினுக்கு புகழாரம்
இதனிடையே இந்த ஆய்வின் போது வீட்டு வாசல்களில் நின்று தன்னை வரவேற்ற பொதுமக்களையும் அருகில் சென்று சந்தித்து பேசி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மக்களிடம் இவ்வளவு தூரம் நெருங்கிப் பழகும் முதல்வரை இதற்கு முன் கண்டதில்லை என புளியந்தோப்பு, வேப்பேரி பகுதி மக்கள் ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினர்.












Click it and Unblock the Notifications