இந்தியாவின் தலைமையகமாக தமிழ்நாடு.. எந்த துறையில்? ரூ.25 கோடி ஒதுக்க உத்தரவிட்ட ஸ்டாலின் - வேற லெவல்
சென்னை: சென்னையில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்திட வேண்டும் என ரூ.25 கோடி ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டு இளைஞர்களிடையே விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதிலும், தமிழ்நாட்டில் சர்வதேசத் தரத்திலான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தனிக் கவனம் செலுத்துவதற்காக முதன் முதலில் விளையாட்டுத் துறைக்கென ஒரு தனி அமைச்சர் பதவியை 9-12-1999 அன்று ஏற்படுத்தியும், தலைமைச் செயலகத்தில் விளையாட்டுத் துறையை ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின்கீழ் தனித்துறையாக 2000 ஆண்டு ஜூன் திங்களில் ஏற்படுத்தியும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு ஊக்கமளித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, 2021 இல் பொறுப்பேற்ற மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுக் கட்டமைப்புகளை ஒவ்வொரு விளையாட்டுக்கும் தமிழ்நாட்டில் ஏற்படுத்திட வேண்டும் என்று முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்கள். அதற்கு ஏற்ப மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களும் தமிழ்நாட்டின் விளையாட்டுக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வத்துடன் செயலாற்றுகிறார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதல் கட்டமாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளைத் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டு ஒன்றிய அரசின் ஒப்புதலோடு மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களை அழைத்து 2022 ஆம் ஆண்டில் 44 வது செஸ்ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டு உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றது. மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கடும் உழைப்பால் அண்மையில், கேலோ இந்தியா 2023 விளையாட்டுப் போட்டிகள், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் இந்திய பிரதமர் திரு.மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு ஏறத்தாழ 5,000 த்திற்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன.
இந்தப் போட்டியில் 38 தங்கப் பதக்கங்கள் பெற்று தமிழ்நாடு பதக்கப்பட்டியலில் 2-ஆம் இடம் பெற்று, மாபெரும் சாதனை நிகழ்ந்துள்ளது. இவற்றுக்கெல்லாம் இந்த அரசும் மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களும் விளையாட்டுக் கலை வளர்ச்சிக்கு அளித்து வரும் அளப்பரிய ஊக்கமும் ஒத்துழைப்புமே காரணம் ஆகும். 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், சென்னையில் உள்ள ஐந்து முக்கிய விளையாட்டரங்கங்களில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும் என அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில் சென்னை மாநகரில் உள்ள 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான விளையாட்டு உட்கட்டமைப்புகளைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்தி மேம்படுத்திட மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம் ரூ.11 கோடியே 34 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் 5 கோடியே 71 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஜவர்ஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் 2 கோடியே 35 இலட்சம் மதிப்பீட்டிலும், வேளச்சேரி நீச்சல்குளம் வளாகம் 4 கோடியே 72 இலட்சம் மதிப்பீட்டிலும் நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் 88 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்பட மொத்தம் 25 கோடி ரூபாய் நிதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது இந்திய விளையாட்டுத்துறையின் தலைமையகமாக தமிழ்நாட்டை உருவாக்கிட முனைந்திடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உயர்ந்த நோக்கத்திற்கு ஒரு சீரிய சான்றாகும்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications