பெண்களுக்காக பிரத்யேக பிங்க் பேருந்து சேவை தொடக்கம்.. சென்னையில் எந்தெந்த வழிதடங்களில்?
சென்னை: சென்னையில் பெண்களுக்கான பிரத்யேக பிங்க் பேருந்து மற்றும் பிங்க் ஆட்டோ சேவையை இன்று தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையில் பிங்க் நிற பேருந்துகள் ஓடும் வழித்தடங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பெண்களுக்காக பிரத்யேகமாக 10 pink bus இயக்கப்படுகிறது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டை இன்று தொடங்கி வைத்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கான பிரத்யேக பிங்க் பேருந்து சேவையையும் தொடங்கி வைத்தார். பிங்க் பேருந்துகள், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கான வாகனங்கள் மற்றும் பிங்க் ஆட்டோக்களையும் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பிங்க் பேருந்து
தமிழ்நாட்டில் பெண்களுக்கு சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலை வலுப்படுத்தும் நோக்கத்தில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இரு நாட்கள் நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது மகளிர்களுக்கு என பிரத்யேக பிங்க் நிற பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரு வழித்தடத்திற்கு இரண்டு பேருந்துகள் விதம் ஐந்து வழித்தடங்களில் 10 பிங்க் நிற பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
எந்தெந்த வழித்தடங்கள்?
56A பிராட்வே - எண்ணூர்
32B கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் - விவேகானந்தர் இல்லம்
57 செங்குன்றம் - வள்ளலார் நகர்
102P பிராட்வே - செம்மஞ்சேரி
102K பிராட்வே - கண்ணகி நகர்
சென்னையில் இந்த 5 வழித்தடங்களிலும் தலா 2 பேருந்துகள் என மொத்தம் 10 பிங்க் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஸ்டாலின் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்தியாவிலேயே வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். புதிதாக எந்த நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்கும் முன் வந்தாலும் இதன் மூலம் பெண்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என்பதை தான் நான் கேட்கும் முதல் கேள்வியாக இருக்கும் எனக் கூறினார்.
மேலும் திமுக அரசிலும் பெண்களின் சம பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மகளிர் விடியல் பயணம், புதுமை பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தோழி விடுதிகள், காலை உணவு திட்டம், TN RISE என பல திட்டங்களை உருவாக்கி உள்ளோம். மாதம் ரூ.1000 உரிமைத்தொகை என யாரும் செய்யாத திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
பிங்க் பேட்ரோல்
மேலும், சட்டசபையில் 2025 - 2026 காவல் துறை மானியக் கோரிக்கையில், மகளிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 80 பிங்க் ரோந்து வாகனங்கள் போலீசாருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநகர போலீசாரின் பயன்பாட்டுக்காக 80 பிங்க் நிற ரோந்து வாகனங்கள் ரூ.12 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டன. அவற்றின் பயன்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவை தாம்பரம், ஆவடி, சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, நெல்லை, மதுரை மாநகரங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொண்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications