சூப்பரா செயல்படுறீங்க தம்பி! பெருமையா இருக்கு! ஸ்டாலினிடம் நெகிழ்ந்த ஆற்காடு வீராசாமி!
சென்னை: உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் முன்னாள் பொருளாளருமான ஆற்காடு வீராசாமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்தச் சந்திப்பின் போது 'சிறப்பாக செயல்படுறீங்க தம்பி, ரொம்ப பெருமையா இருக்கு' என தனது மகிழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆற்காடு வீராசாமி.
இதனிடையே 'நீங்க விரைந்து நலம் பெற வேண்டும்' என வாழ்த்துக் கூறி ஆற்காடு வீராசாமிக்கு தைரியம் அளித்து திரும்பியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆற்காடு வீராசாமி
கடந்த 6-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆற்காடு வீராசாமி இரண்டு நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ளார். தற்போது வீட்டிலும் அவருக்கான சிகிச்சை தொடர்கிறது. இதற்காக மருத்துவமனை செட்-அப்பில் கட்டில் மற்றும் குளுக்கோஸ் ஏற்றுவதற்கு தேவையான உபகரணங்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் கேர் டேக்கர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நலம் விசாரிப்பு
ஆற்காடு வீராசாமியின் மகனும் வடசென்னை மக்களவை தொகுதி உறுப்பினருமான கலாநிதி வீராசாமி மருத்துவர் என்பதால் அவரே அவரது தந்தையை கவனித்துகொள்கிறார். இந்நிலையில் ஆற்காடு வீராசாமியை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோர் நேற்று அவரது வீட்டுக்கு சென்றனர். தன்னை நலம் விசாரிக்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை கண்டதும் நெகிழ்ச்சியுடன் பழைய நினைவுகளை அசை போட்டுள்ளார் ஆற்காடு வீராசாமி.

ஸ்டாலினுக்கு பாராட்டு
மேலும், 'தம்பி நீங்க சிறப்பாக செயல்படுறீங்க, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது' எனக் கூறிய ஆற்காடு வீராசாமி திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியும் 'சூப்பராக செயல்படுகிறார்' என பாராட்டியிருக்கிறார். உடல்நலம் சரியில்லாத சூழலிலும் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை தொடர்ந்து தாம் கவனித்து வருவதை இதன் மூலம் உணர்த்தினார் ஆற்காடு வீராசாமி.

மகன் விளக்கம்
இதனிடையே ஆற்காடு வீராசாமிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருந்துகள் விவரம் குறித்து முதலமைச்சரிடம் விளக்கி கூறியிருக்கிறார் கலாநிதி வீராசாமி எம்.பி. இதேபோல் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோரிடமும் மிகவும் கேசுவலாக கட்சிப்பணிகள் மற்றும் ஆட்சிப்பணிகள் குறித்து ஆற்காடு வீரசாமி பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications