என் இதயத்தில் நீங்கா இடம் பிடித்து விட்டார் TRB ராஜா.. உச்சி குளிர பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: இமாலய சாதனை செய்து என் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் தம்பி டி.ஆர்.பி.ராஜா என நெகிழ்ச்சியுடன் பாராட்டிப் பேசியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்றும் இன்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் என சுமார் 50 நாடுகளில் இருந்தும் டாப் தொழில் நிறுவனங்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டன. இந்த மாநாட்டின் மூலம் ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் பல தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மாநாட்டின் முதல் நாளான நேற்று பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மாநாட்டின் முதல் நாளிலேயே நிர்ணயிக்கப்பட்ட 5.5 லட்சம் கோடி இலக்கு எட்டப்பட்டது.
இந்நிலையில், இன்றைய மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தமிழ்நாட்டில் முதலீடுகளைச் செய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டன. பல்வேறு அரங்குகளில் கலந்துரையாடல் அமர்வுகள் நடைபெற்றன. இன்றைய முக்கிய விருந்தினராக மஹேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹேந்திரா பங்கேற்றார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர், "சென்னையில் நடந்து வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூபாய் 6.64 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். மறைமுகமாக 12,30,945 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஒட்டுமொத்தமாக இந்த முதலீடுகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், தமிழ்நாட்டில் 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவே வியக்கும் வகையில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
திராவிட மாடல் ஆட்சியில் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளோம். தமிழக தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக உலக முதலீட்டாளர் மாநாடு அமையும். சென்னையில் நடந்த 2 நாள் உலக முதலீட்டாளர் மாநாட்டின் மகத்துவம் என்றென்றும் நினைவுகூரப்படும்.
உலகமே வியக்கும் வண்ணம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்திக் காட்டியுள்ளார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட குறுகிய காலத்திலேயே இமாலயச் சாதனையைச் செய்து இருக்கிறார். என் இதயத்தில் நீங்கா இடம் பிடித்து விட்டார் தம்பி டி.ஆர்.பி.ராஜா." என நெகிழ்ந்துபோய் பாராட்டிப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
2 நாள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளதால், முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் மகிழ்ந்துள்ளார். அதன் வெளிப்பாடாகவே நிறைவு விழாவில், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவை உச்சி குளிர பாராட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications