எனது அண்ணன் மு.க. அழகிரி.. என்ட்ரன்ஸ் எக்ஸாமில் நான் ஃபெயில்.. ஸ்டாலினின் உருக்கமும் கலகலப்பும்!
சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்றைய தினம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் இந்த பள்ளியில் பயின்றவர் என்பதால் அவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது முதல்வர் பேசுகையில், இங்கே நம்முடைய தமிழாசிரியர் ஜெயராமன் அய்யாவை பேசும் போது கூட சொன்னார். என்னுடைய அண்ணன் முத்து இங்குதான் படித்தார். என்னுடைய அண்ணன் அழகிரியும் இங்குதான் படித்தார். அவர்களைத் தொடர்ந்து நானும் இங்குதான் படித்தேன்.

குடும்ப பொறுப்பு
அவர்கள் படித்துக் கொண்டிருப்பதால் என்னையும் இங்கே சேர்க்க வேண்டுமென்று எங்களையெல்லாம் கண்காணித்துக் கொண்டு குடும்ப பொறுப்பேற்றுக் கொண்டிருந்தவர் மறைந்த முரசொலி மாறன். என்னுடைய மாமா அவர். அவர்தான் பொறுப்பேற்றுக் கொண்டு எங்களை எல்லாம் படிக்க வைத்தார். என்னை இந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என எவ்வளவோ முயற்சி செய்தார்.

சர்ச் பார்க் கான்வென்ட்
1ஆம் வகுப்பிலிருந்து 6ஆம் வகுப்பு வரை படிப்பதற்கு சர்ச் பார்க் கான்வென்டில் சேர்ப்பதற்கான முயற்சியில் என்னையும் எனது தங்கை செல்வியையும் கொண்டு சேர்க்க முயற்சித்தார். அட்மிஷன் கிடைத்தது. ஸ்கூலில் போய் சேர்க்கும் நேரத்தில் எனது பெயரை மாற்ற வேண்டும என சொல்லிவிட்டார்கள். ஸ்டாலின் என்கிற பெயர் இருக்கக் கூடாது. ரஷ்யாவில் ஒரு மிகப்பெரிய புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. சிலையெல்லாம் உடைத்து கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலின் பெயரை மாற்றச் சொன்ன பள்ளி
எனவே இந்த பெயரை ஏற்றுக் கொள்ள மாட்டோம். பெயரை மாற்றுங்கள் என்றார்கள். சர்ச் பார்க் கான்வெனட்டில் அப்போதெல்லாம் இடம் கிடைப்பது என்பது அபூர்வம். அப்போது மாறன் மாமா எனது தந்தையிடத்தில் சென்று சர்ச் பார்க்கில் எனது பெயரை மாற்ற சொல்கிறார்கள் என மாமா சொன்னார். அதற்கு என் தந்தையோ பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர பெயரை மாற்றவே மாட்டேன் என என் தந்தை கருணாநிதி கூறிவிட்டார்.

நுழைவு தேர்வில் ஃபெயில்
நான் இந்த பள்ளிக்கு ஒரு முதல்வராக வரவில்லை, மாணவராகத்தான் வந்துள்ளேன். உங்களுடைய பழைய நண்பனாக வந்துள்ளேன். இந்த பள்ளியில் எனது அண்ணன்கள் படித்து கொண்டிருந்ததால் எனக்கு இடம் கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் இங்கு நுழைவுத் தேர்வு நடத்தினர். அதில் ஃபெயிலாகிவிட்டேன். சேர்க்க முடியாது என சொல்லிவிட்டார்கள். சென்னையின் மேயராக இருந்தவர் குசேலர். அப்போதெல்லாம் மேயர் என்றால் கப்பல் போன்ற கார், அங்கி, 100 பவுன் செயின், செங்கோலுடன்தான் வருவார்கள். மேயர் பதவிக்காலம் ஓராண்டுதான்.

மேயர் சிபாரிசு
இந்த பள்ளியில் மேயர் சிபாரிசு செய்தால் இடம் கிடைக்கும் என்பதால் என்னை அழைத்துக் கொண்டு மாமா முரசொலி மாறன் சென்றார். அப்போது மேயரின் செவர்லெட் காரில் நான், மேயர், முரசொலி மாமா ஆகியோர் பள்ளிக்கு வந்தோம். யாருடைய காராக இருந்தாலும் பள்ளியில் குறிப்பிட்ட இடம் வரை மட்டுமே அனுமதிப்பார்கள். ஆனால் மேயர் காரில் உள்ளே வந்தேன். மேயரை வரவேற்ற தலைமை ஆசிரியர் சவுரிராஜன், அறையின் உள்ளே அழைத்து செல்கிறார். எனக்கு இந்த பள்ளியில் படிக்க சீட் கிடைத்தது. நான் அமைச்சராக , முதல்வராக இருப்பதற்கு காரணமே இந்த பள்ளிதான் என முதல்வர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications