சொல்லுங்கம்மா! எங்கயிருந்து பேசுறீங்க?.. கண்ட்ரோல் ரூம் போன் காலை அட்டெண்ட் செய்த முதல்வர்
சென்னை: சென்னையில் எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த போது மழை தொடர்பான புகாருக்கு தொலைபேசியில் பதிலளித்தார்.
சென்னையில் இன்றும் நாளையும் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கு பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். கடலோர காவல் படையினரும் தீயணைப்பு படையினரும் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளார்கள்.
இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உதவிக்கு அழைக்க அரசு சார்பில் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் தனி குழு இயங்கி வருகிறது.

4ஆவது நாள்
மழை பாதிப்பு குறித்து 4ஆவது நாளாக சென்னையில் ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினார். அங்கு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். அங்கிருந்த மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். மேலும் நிவாரண முகாம்களிலும் மக்களை சந்தித்து உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

பேரிடர் கட்டுப்பாட்டு அறை
இதையடுத்து அவர் எழிலகத்தில் இயங்கி வரும் வருவாய் மற்றும் பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு நடத்தினார். அப்போது எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு என கேட்டறிந்தார். மழை தொடர்பான புகார்கள் வருவது குறித்து அதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

பேரிடர் கட்டுப்பாட்டு அறை
சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அங்கு மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மழை தொடர்பாக புகார் குறித்து அங்கிருந்த தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது அங்கிருந்த முதல்வர் ஸ்டாலின் அந்த போன் காலை எடுத்து பேசினார்.

தீர்வு
எதிர்முனையில் பேசியவரிடம் எந்த பகுதியில் இருந்து பேசுகிறார், என்ன பிரச்சினை என கேட்டறிந்த அவர் உடனடியாக தீர்வு காணப்படும் என தெரிவித்தார். அங்கிருந்த ரேடார்களின் இயக்கங்களையும் பார்வையிட்டார். மக்கள் எந்த நேரத்தில் அழைத்தாலும் உடனே அதற்கு தீர்வு காண வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications