மோசமான பாதுகாப்பு குளறுபடி.. இனி நடக்கவே கூடாது: நாடாளுமன்ற சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
சென்னை: நாடாளுமன்றத்தில் இன்று நடந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி; தவறு செய்தவர்கள் மீது தாமதமின்றி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
வழக்கம்போல் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. லோக்சபா நடவடிக்கைகளை பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்கள் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் திடீரென்று லோக்சபா அரங்குக்குள் மஞ்சள் நிற ஸ்பிரே அடித்தனர். அதோடு ஒருவர் லோக்சபா அரங்குக்குள் குதித்து சபாநாயகர் இருக்கை நோக்கி ஓடினார். இந்தச் சம்பவத்தால் அவையில் இருந்த எம்.பிக்கள் பயந்துபோயினர். அவர்கள் பாதுகாப்பு கருதி ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து பிற எம்.பிக்கள், அவர்கள் 2 பேரையும் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். நாடாளுமன்றத்துக்கு வெளியேவும் ஒரு பெண், ஒரு ஆண் ஸ்பிரே அடித்து கோஷமிட்டனர். இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தற்போது டெல்லி போலீசார் மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையை சேர்ந்தவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் லோக்சபாவுக்குள் நுழைந்து ஸ்பிரே அடித்த நபர்களின் பெயர்கள் சாகர் சர்மா மற்றும் டி மனோ ரஞ்சன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் கர்நாடகாவின் மைசூர் -குடகு நாடாளுமன்ற தொகுதியின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பெயரில் விசிட்டர் பாஸ் பெற்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்தது தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான இன்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The unprecedented security breach in the parliament poses a dangerous threat to our august temple of democracy.
— M.K.Stalin (@mkstalin) December 13, 2023
Swift action must be taken without delay. I appeal for launching a prompt investigation, fixing accountability, and implementing measures to prevent future lapses,…
நாடாளுமன்றத்தில் இன்று நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். பலகட்ட சோதனைக்குப் பின்னர் புகை கக்கும் கன்டெய்னருடன் ஒருவர் எப்படி நுழைய முடியும்? இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஜனநாயக கோவிலான பாராளுமன்றத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல். இதுவரையில் இல்லாத வகையில் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குளறுபடி. இந்தச் சம்பவத்தில் தவறிழைத்தவர்கள் மீது உடனே உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும். எதிர்காலத்தில் பாதுகாப்பு குறைபாடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications