மீனவர்கள் கைது.. விடுவிக்க அவசர நடவடிக்கை தேவை! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்கின்றன. இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய அரசு உடனடியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் இன்று வழக்கம்போல வங்கக்கடலில் மீன் பிடிக்க சென்றிருக்கின்றனர். அதிகாலை 2 மணியளவில் வடமேற்கு கடற்பரப்பில், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஈசக்பவுல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 7 மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த படகையும், அதிலிருந்த மீனவர்களையும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களிடம் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விசாரணை முடிந்த பின்னர் மீனவர்களை படகுடன் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இதனையடுதது ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. மீனவர்களின் கைது நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், "இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட மற்றொரு துயர சம்பவத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். 13.07.2025 அதிகாலையில், ஏழு மீனவர்கள், பதிவு எண்- IND-TN-10-MM-746 கொண்ட அவர்களின் இயந்திர மீன்பிடி படகுடன் கைது செய்யப்பட்டனர்.
அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், மற்றொரு இயந்திர படகு (IND-TN-10-MM-1040) இலங்கை கடற்படை கப்பலால் மோதப்பட்டதாகவும், இதன் படகின் பின்புறம் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிய வருகிறது. மீண்டும் மீண்டும் நிகழும் இந்த சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன. அவை நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பங்களை நீண்டகால பொருளாதார நெருக்கடி மற்றும் தொடர்ந்த துயரங்களுக்கும் உள்ளாக்குகின்றன.
இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கும் வகையில், 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மீனவர்களில் பலர் இன்னும் இலங்கை காவலில் உள்ளனர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். தற்போது, 232 தமிழக மீன்பிடி படகுகளும் 50 மீனவர்களும் இன்னும் இலங்கை அதிகாரிகளால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொடர்ச்சியான அச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கிடைக்கக்கூடிய அனைத்து தூதரக வழிகளையும் மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications