ஆட்சியில் பங்கில்லை என்பது முதல்வரின் கருத்து.. காங்கிரஸ் மேலிடம் முடிவெடுக்கும்.. செல்வப்பெருந்தகை!
சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார். தமிழ்நாட்டுக்கும் இரு கட்சிகளுக்கு எது சிறந்த முடிவோ, அதனை ராகுல் காந்தி, ஸ்டாலின் மற்றும் கார்கே ஆகியோர் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள் என்று கூறிய செல்வப்பெருந்தகை, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித பிணக்கோ சிக்கலோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், காங்கிரஸ் கட்சி திடீரென ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன் வைத்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் தொடர்ச்சியாக இதுகுறித்து பேசி வருகின்றனர். ஆனால் திமுக தரப்பில் எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை.

ஸ்டாலின் பேசியது என்ன?
இந்த நிலையில் இந்தியா டுடே தொலைக்காட்சியின் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது ஸ்டாலின், ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இது காங்கிரஸ் நிர்வாகிகளிடையே சலசலப்பை உருவாக்கி இருக்கிறது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என்பது முதல்வரின் கருத்து.. அவர் கட்சியின் கருத்து..
செல்வப்பெருந்தகை பதில்
அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கிறது.. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.. அந்த கருத்துக்களை கூறுவது ஜனநாயக உரிமை.. அதன் அடிப்படையில் ஒவ்வொரு தலைவர்களும் ஒரு கருத்தை கூறி இருக்கிறார்கள். அதனை ஏற்றுக் கொள்வதும், இல்லை என்பதும் ராகுல் காந்திக்கும், ஸ்டாலினுக்கும் இடையிலானது.
காங்கிரஸ் முடிவு என்ன?
இதனால் ஒரு பிணக்கோ, சிக்கலோ வருமா என்று எல்லோரும் காத்திருக்கிறார்கள். ஆனால் திமுக - காங்கிரஸ் இடையில் எதுவும் வராது. இது வலிமையான கூட்டணி.. முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.. வதந்திகள் எதற்கும் இடம் கொடுக்கமல் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் நல்ல முடிவை எடுப்பார்கள். அது தமிழ்நாட்டு மண்ணை பாதுகாக்கும் முடிவாக இருக்கும்.
காங்கிரஸ் - திமுக நட்பு
இதனை உறுதியாக எடுத்துக் கொள்ளலாம். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஸ்டாலின் - ராகுல் காந்தி இடையில் ஒரு உறவு இருக்கிறது என்று முதல்வர் கூறியுள்ளார். இதனால் இந்த விஷயத்தை இருவரும் பேசி தீர்த்துக் கொள்வார்கள். நாங்கள் எந்த கோரிக்கையையும் கைவிடவில்லை. காங்கிரஸ் மேலிடமும், ஸ்டாலினும் இணைந்து முடிவு எடுப்பார்கள். இது நிலையான, உறுதியான கூட்டணி.
மக்களின் எண்ணம்
காங்கிரஸ் - திமுக இடையில் நல்ல சகோதரத்துவம் உள்ளது. இந்த கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தலாமா என்று பலரும் காத்திருக்கிறார்கள். ஆனால் கூட்டணி உறுதியாக இருக்க வேண்டும் என்று ஜனநாயக சக்திகளும், சாமானிய மக்களும் விரும்புகிறார்கள். தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க பாஜக முயன்றுள்ளது. அதற்கு அதிமுக துணை போயிருக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சி மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து முடிவு எடுக்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications