ஆளுநரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறும் தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக பல்வேறு இடங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் பல்வேறு இடங்களிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல்துறையினர் தீவிர சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார். அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்ற இருக்கிறார்.
ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் தமிழக ஆளுநர் மாளிகையான கிண்டி ராஜ் பவனில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இந்த தேநீர் விருந்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உட்பட தமிழக அரசியல் கட்சிகள் பங்கேற்கும்.
இந்தநிலையில் நாளை சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் தேநீர் விருந்துக்கு தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர்.ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கின்றன.
திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு திமுக கட்சி சார்பில் ஆளுநர் விருந்தை புறக்கணித்தபோதும், தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டு ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறும் தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்படுவதை எதிர்த்து, சுதந்திர நாளை ஒட்டி அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து செயல்பட்டுவரும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆகஸ்ட் 18 மற்றும் ஆகஸ்ட் 19 ஆகிய நாள்களில் நடைபெறும் இரண்டு பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில் முதல்வர் ஸ்டாலினின் அறிவுத்தலின்படி பங்கேற்கப் போவதில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கையில், "தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா முறையாக தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல், தாமதப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
அதுமட்டுமன்றி, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழகங்களின் சட்டம் தொடர்பாக வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினைப் பெற்ற பின்பு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடையாணை பெற்றார்.
அந்தத் தடையாணையினை நீக்கிட உச்ச நீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு அணுகியுள்ளது. உச்சநீதிமன்றத்தில், ஆளுநர் மேற்படி பா.ஜ.க. பிரமுகர் தெரிவித்த கருத்துகளை ஆதரிக்கும் வகையில் முந்திக்கொண்டு போய் வாதுரை தாக்கல் செய்துள்ளார். இது அவரது அரசியல் சார்பு தன்மையை அப்பட்டமாக வெளிக்காட்டுவதோடு, அவரது ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கும் இது ஒரு உதாரணமாக விளங்குகிறது.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் நிலைமைக்கு ஆளுநரின் செயல்பாடுகளும், அவர் போட்டுவரும் முட்டுக்கட்டைகளும்தான் காரணம். இந்தச் சூழ்நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஆக. 15 அன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார்.
மேலும், முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி தானும் ஆக. 18 மற்றும் ஆக. 19 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழங்களின் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்கப் போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications