இஸ்ரேல் ஈரான் போர்..தலைக்கு மேல் கத்தி! தவிக்கும் தமிழர்கள்! மத்திய அரசுக்கு பறந்த ஸ்டாலினின் கடிதம்
சென்னை: ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இஸ்ரேல் ஈரான் போர் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக அந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் 'ஆபரேஷன் சிந்து' மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் ஈரானில் மீன் பிடி தொழில் செய்து வரும் நிலையில், அங்கு அவர்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக உறவினர்களிடம் பேசிய மீனவர்கள் தாங்கள் ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதாகவும் தங்களை மீட்டுக் கொண்டு வர அரசு உதவியை நாட வேண்டும் என கேட்டிருந்தனர். இது தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சியினரும் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஈரான்-இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்," மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்களின் நிலை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போதைய தகவல்படி அந்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 498 மீனவர்களும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 78 மீனவர்களும், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 72 மீனவர்களும் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 3 மீனவர்களும், ஆகமொத்தம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 651 மீனவர்கள் தற்போது ஈரானில் சிக்கித் தவிப்பதாகவும், அங்கு அதிகரித்து வரும் போர்ச் சூழல் காரணமாக அவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதோடு, தமிழ்நாட்டிற்குத் திரும்ப முடியாமல் உள்ளனர் என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மீனவர்களின் பாதுகாப்பு குறித்த தகவல்கள் ஏதும் இல்லாத காரணத்தால், தாயகத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினர் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர் என்றும், மீனவர்கள் தாயகம் திரும்பும் செய்திக்காக அவர்கள் காத்திருப்பதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், தற்போது அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலையில் சிக்கியுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பிட அரசின் உதவியை நாடுவதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த மனிதாபிமான விஷயத்தில், ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் விரைவான தலையீடு, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும். அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த ஆறுதலைத் தரும் என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும், அவர்களின் நலனை உறுதிப்படுத்தவும், அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கும் தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்" என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications