கரூர் கூட்டத்தில் 606 போலீசார்.. வழக்கத்தை விட அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது.. முதல்வர் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும். கரூர் கூட்ட நெரிசல் போன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என அரசியல் கட்சிகள் உறுதி ஏற்க வேண்டும் " என சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக சட்டசபை, சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று தொடங்கியது. அக்டோபர் 17 வரை 4 நாட்களுக்கு நடைபெறும் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி மற்றும் கரூர் கூட்ட நெரிலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

CM Stalin Urges Parties to Pledge Against Repeat of Karur Tragedy

இந்த நிலையில், இன்று இரண்டாவது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக சட்டசபையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கரூர் துயரச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துப் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "தவெக சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று 11 நிபந்தனைகள் உடன் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. போதிய எண்ணிக்கையில், அதாவது 517 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுமட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் காவல் உயர் அதிகாரிகள், காவலர்கள் என 91 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

கரூர் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் காவல் துறையின் சார்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் என மொத்தம் 606 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

வழக்கமாக அரசியல் பரப்புரை கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக் காவலர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகவே வழங்கப்பட்டிருந்தது. 10,000 பேர் வருவார்கள் என்று கோரிக்கை மனுவில் கூறப்பட்ட நிலையில், அதைவிட அதிகமாக வருவார்கள் என்று கணித்து கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட்டன. பகல் 12 மணிக்கு தவெக தலைவர் கரூர் வருவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்ட நேரம் கழிந்து 7 மணி நேரம் தாமதமாக வந்தார். இந்த விஷயம் தான் கூட்ட நெரிசலுக்கு காரணமாக அமைந்தது.

கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவை கரூரில் செய்யப்படவில்லை. காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை. உணவு வழங்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை.

கூட்டத்தில் சிக்கியவர்களை காப்பாற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்தது. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றபோது தவெகவினர் ஆம்புலன்ஸ் வாகனங்களை தாக்கினர். கரூர் பரப்புரையின்போது ஜெனரேட்டர் இருந்த தகரக்கொட்டகைக்குள் கூட்டம் புகுந்தது. மின்சாரம் தாக்குவதை தவிர்க்க ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தை நிறுத்தியுள்ளார்.

கரூர் துயர சம்பவம் நடந்த அதே இடத்தில் 2 நாட்களுக்கு முன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட அதிமுக கூட்டம் நட்டதுள்ளது. அந்தக் கூட்டத்தில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. சுமார் 12,000 பேர் பங்கேற்றிருந்தனர். அங்கு கூடியவர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் கூடி கலைந்தனர். இதற்கு நேர்மாறாக தவெக கூட்டத்தில் நடந்துள்ளது.” என்றார்.

முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பேசுகையில், "நான் எனது 50 ஆண்டு காலப் பொது வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். பார்த்திருக்கிறேன். இங்குள்ள அனைத்து அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் இத்தகைய அனுபவம் கொண்டவர்கள்தான். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துபவர்கள் அதற்குரிய சட்ட திட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும், பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

அப்படித்தான் நடத்த வேண்டும் கட்டுப்பாடுகளை மீறும் போது, அதனால் பாதிக்கப்படுவது நிகழ்ச்சி நடத்தும் கட்சியின் தொண்டர்கள்தான். அதனை மனதில் வைத்து பொறுப்போடு செயல்பட வேண்டும். உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும். கரூர் கூட்ட நெரிசல் போன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என அரசியல் கட்சிகள் உறுதி ஏற்க வேண்டும் " என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+