மோதி பார்த்திடலாம்.. ராமநாதபுரத்தில் போட்டியிடும் மோடி? வசமாக செக் வைக்கும் ஸ்டாலின்.. சக்ர வியூகம்!
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடி ராமநாதபுரத்தை குறி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர் போட்டியிடும் பட்சத்தில் மோடியை எதிர்க்க முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறாராம்.
2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி, குஜராத்தில் உள்ள வதோதரா தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் பிரதமர் மோடி வெற்றிபெற்றார்.

அதன்பின் வதோதரா தொகுதியில் பிரதமர் மோடி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் தென் இந்தியாவில் கவனம் செலுத்த பாஜக முடிவு செய்துள்ளது. இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆலோசனை செய்துள்ளார்.
ஆலோசனை: தென் மாநில பாஜக தலைவர்கள், பொதுச்செயலாளர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ஜே.பி நட்டா இந்த திட்டத்தை தெரிவித்து அது தொடர்பாக நேற்று ஆலோசனை கேட்டு இருக்கிறார். . இதற்கு பெரும்பாலான தலைவர்கள், உடனடியாக ஆதரவு வழங்கி உள்ளனர். மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்று தீவிரமாக கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் மோடி எங்கே ராமநாதபுரத்தில் போட்டியிடுவாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.
காரணங்கள்: இதற்கு பின் பல்வேறு காரணங்கள் உள்ளன. முக்கியமாக தமிழ்நாட்டில் அதிக எம்பிக்களை வெல்ல பாஜக முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் எப்படியாவது பாஜகவை வளர்க்க வேண்டும் என்று அந்த கட்சி முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் இந்த முறை வடக்கில் பாஜகவிற்கு சரிவு ஏற்படும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேபோல் காங்கிரஸ் பெரிய எழுச்சி அடையும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அப்படி இருக்க வடக்கில் இழக்கும் இடங்களை தெற்கில் தட்டி தூக்கும் விதமாக மோடி தென் மாநிலத்தில்.. அதாவது தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வாரணாசி மற்றும் ராமநாதபுரம் இரண்டு தொகுதிகளிலும் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதி என்றாலும்.. ராமர் பாலம் உள்ள செண்டிமெண்ட், சிவ தளம், போன்ற இந்துத்துவா கனெக்சன் முக்கியமான காரணிகளாக பார்க்கப்படுகிறது.
ஸ்டாலின் பிளான்: ஒருவேளை அவர் போட்டியிடும் பட்சத்தில் மோடியை எதிர்க்க முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறாராம். அதன்படி மிக வலுவான வேட்பாளரை ராமநாதபுரத்தில் இறக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அதோடு அமைச்சர்களை களமிறக்கி மோடியை தோற்கடிக்கவும் வலுவான திட்டங்களை வகுக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்.
முக்கியமாக அங்கே மீனவர்கள் அதிகம் உள்ளனர். மோடி ஆட்சியில் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாகவும் பிரச்சாரம் செய்ய உள்ளாராம். இதற்காக அடுத்த மாதம் மீனவ சங்கங்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். மோடி களமிறங்கினால் இறங்கட்டும்.. மோதி பார்த்துவிடலாம் என்ற திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறாராம்.

மோடி தமிழ்நாடு: 2019 தேர்தலிலேயே தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் மோடியை களமிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அதேபோல் ராகுல் காந்தியும் தமிழ்நாட்டில் போட்டியிடுவதாக இருந்தது. கடைசியில் வயநாட்டில் அவர் போட்டியிட்டார். அந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றிபெற.. ராகுல் காந்தி போட்டியிட்டதும் காரணமாக அமைந்தது. அதேபோல்தான் பாஜகவும் மோடியை தமிழ்நாட்டில் களமிறக்கி தமிழ்நாட்டில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராகுல் கேராளாவில் காங்கிரஸ் வெற்றிக்கு காரணமாக இருந்தது போல தமிழ்நாட்டில் மோடி பாஜக வெற்றிக்கு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கலாம். பாஜக தமிழ்நாட்டில் இத்தனை நாட்கள் பேசு பொருட்களாக இல்லை. இப்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது. இந்த நிலையில்தான் மோடி வந்தால் பாஜகவின் நிலை மாறும் என்று அந்த கட்சி நினைக்கலாம்.
இஸ்லாமியர்கள்: ராமநாதபுரம் தொகுதியில் கணிசமான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். அப்படியான ஒரு தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டு வென்றால் பாஜக மீதான இமேஜ் மாறும். தென்னிந்தியாவில் பாஜக காலூன்ற பெரிய காரணமாக அமையும். ஏற்கனவே மோடி செங்கோல், தமிழ்தான் முதல் மொழி என்று சென்டிமென்ட்டாக தமிழ்நாடு விஷயங்களை பேசும் நிலையில் தேர்தலில் அவருக்கான வெற்றியும் எளிதாக மாறும்.












Click it and Unblock the Notifications