CM Vijay-யின் மெகா கனவை நிறைவேற்ற களமிறங்கும் கீர்த்தனா.. தமிழ்நாட்டின் வளர்ச்சி இனி இவர் கையில்!
தமிழக அமைச்சரவையில் 9 அமைச்சர்களுக்கு துறைப் பொறுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் முதலீட்டை ஈர்க்கும் முக்கிய பணிகளை மேற்கொள்ளும் தொழிற்துறை அமைச்சகத்தை 30 வயது இளம் பெண் எஸ்.கீர்த்தனாவுக்கு வழங்கியுள்ளார். இந்த நியமனம் தமிழ்நாட்டின் பொருளாதார எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய அடியாக பார்க்கப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முந்தைய திமுக அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா பதவி வகித்தார். தற்போது மே 2026-ல் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான புதிய தமிழ் வளர்ச்சி அமைச்சரவையில், அமைச்சராக பொறுப்பேற்ற ஒரே பெண்ணாக இருந்த கீர்த்தனா தமிழகத்தின் இளம் வயது அமைச்சராவார்.

தொழிற்துறை அமைச்சகத்தின் முக்கியத்துவம்
இந்தியாவில் எந்த மாநிலமாக இருந்தாலும், அந்த மாநிலத்தின் வளர்ச்சியையும் மக்கள் நலனையும் தீர்மானிக்கும் நான்கு முக்கிய துறைகளில் தொழிற்துறை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சி மூலம் புதிய தொழிற்சாலைகள் உருவாகினால், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பிறக்கும். வெளிநாட்டு முதலீடுகள் வரும். உள்ளூர் தொழில் வணிகங்கள் வலுப்பெறும். இதுபோன்ற காரணங்களுக்காகவே முதலமைச்சர் விஜய் இந்தத் துறையை இளம் நபரிடம் ஒப்படைத்துள்ளார்.
இப்பதவில் முன்பு இருந்து டிஆர்பி ராஜா மிகப்பெரிய அளவிலான உயரத்தை தொட்டுள்ளது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின் தொழிற்துறையின் பலத்தை உலக நாடுகளுக்கு காட்டிய முக்கிய நபர். இத்தகைய முக்கியமான பதவியை தான் தற்போது எஸ்.கீர்த்தனாவுக்கு வழங்கியுள்ளார் விஜய்.
விஜய்யின் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார கனவு
தமிழக வெற்றிக் கழகம் தலைவராக விஜய் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, 2036 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதார மதிப்பை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்துவது. இந்த இலக்கை நோக்கி முதல் உறுதியான அடியை அமைச்சரவை துறை ஒதுக்கீடு மூலம் எடுத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.
தொழிற்துறை அமைச்சராக பொறுப்பை ஏற்கும் எஸ். கீர்த்தனா, முதலீட்டை ஈர்க்கும் உத்திகளை வகுத்து, தொழில் நிறுவனங்களுக்கு உரிய ஆதரவை வழங்கி, இந்தப் பெரிய கனவை நனவாக்கும் முக்கிய பொறுப்பில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் கீர்த்தனா
இந்தியாவின் "பட்டாசு தலைநகரம்" என்று புகழப்படும் சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட எஸ். கீர்த்தனா பெரும் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி அரசியல் ரீதியாக மட்டுமின்றி, சின்னமாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தவெக சின்னத்தில் களமிறங்கிய கீர்த்தனா 68,809 வாக்குகள் பெற்று, காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் ஜி.யை 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த வெற்றியின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொகுதியில் இருந்து ஆண்கள் மட்டுமே பிரதிநிதித்துவம் பெற்று வந்த நிலையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. பெண் ஒருவர் எம்எல்ஏவாக வெற்றி பெற்றிருப்பது சிவகாசி தொகுதியின் அரசியல் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
இளம் அமைச்சர் கீர்த்தனா
எஸ். கீர்த்தனா தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர். சிவகாசி தொகுதியின் எம்எல்ஏவாகவும் இருக்கும் இவர், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இளைய உறுப்பினராகவும், ஒரே பெண் அமைச்சராகவும் திகழ்கிறார்.
விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியாப்பட்டியைச் சேர்ந்த சம்பத்தின் மகளான இவர், தனது 30 வயதிலேயே அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளார். இந்த நியமனம் தமிழ்நாட்டு அரசியலில் இளம் தலைமுறைக்கு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது.
கீர்த்தனாவின் கல்வி மற்றும் திறமை
கீர்த்தனா 1996 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த கீர்த்தனா, தமிழ் வழிக் கல்வியில் இயங்கும் அரசுப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்று, இளங்கலை கணிதம் (B.Sc. Mathematics) மற்றும் முதுகலை புள்ளியியல் (M.Sc. Statistics) பட்டங்களைப் பெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சரளமாகப் பேசும் திறன் கொண்டவர் இவர்.
அரசியல் ஆலோசகராக இருந்த பயணம்
அரசியலில் நேரடியாகக் களமிறங்குவதற்கு முன்பு கீர்த்தனா அரசியல் ஆலோசகராகவும், டிஜிட்டல் பிரச்சார உத்தியாளராகவும் பணியாற்றினார். 'ஷோடைம் கன்சல்டிங்' என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றியபோது, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்காக தேர்தல் பிரச்சார உத்திகளை வகுத்தார். குறிப்பாக டிஜிட்டல் தளங்களில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க தீவிரமாக உழைத்தார்.
தற்போதைய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் ஆலோசனை குழுவில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்தில் இணைந்து திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளார் கீர்த்தனா.
தவெகவில் இணைந்த கதை
மார்ச் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த கீர்த்தனா, அடுத்த நாளே சிவகாசி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏ ஆனார்.
அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த ஒருவர், இன்று அதே களத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்பது பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இவரது நியமனம் தமிழ்நாட்டின் தொழில் துறையில் புதிய டிஜிட்டல் உத்திகளையும், இளம் சிந்தனைகளையும் கொண்டு வரும் என்று தொழில் நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications