“ஐயா.. பெரியவர்களே.. எனக்கு சத்தியமா புரியல”.. சட்டசபையில் ஆவேசமாகப் பேசிய முதல்வர் விஜய்!
சென்னை: "மூத்த உறுப்பினர் பேசும்போது, மக்கள் அவர்களின் கட்சிக்கு ஓட்டு போடாததால் மக்களுக்கு நல்ல சாவே வராது என்கிறார். எனக்கு சத்தியமா புரியல. இதே மக்கள் தான் அவர்களுக்கு 50 - 60 ஆண்டுகளாக வாக்களித்துள்ளனர். அவர்களைப் பார்த்து எப்படி அந்த வார்த்தை சொல்ல மனசு வருது? என்னால் அதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை." என ஆவேசமாக சட்டசபையில் பேசியுள்ளார் முதல்வர் விஜய்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சட்டசபையில் பேசுகையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக எவ்வளவு அவமானங்களை சந்தித்தார் என்பதையெல்லாம் நாம் கேள்விப்பட்டுள்ளோம். இதே சட்டசபையில் இதே எதிர்க்கட்சியால் எவ்வளவு அவமானங்களை சந்தித்துள்ளார் என்பதையெல்லாம் நாம் கேள்விப்பட்டுள்ளோம். அதெல்லாம் வேறு எந்தப் பெண்ணுக்கும் நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

டெக்னாலஜி, நாகரீகம் எல்லாம் வளர்ந்திருக்கிறது. அரசியல் ரீதியாக என்ன வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதுதான் கருத்துரிமை, பேச்சுரிமை. சில நாட்களுக்கு முன், ஒரு உறுப்பினர், சட்டசபைக்குள்ளேயே எலும்பை உடைப்பாராம். இதுதான் அரசியலா? மக்கள் இதை பார்த்துப் பார்த்துதான் இவர்கள் எல்லோரும் அந்தப் பக்கம் அமர்ந்திருக்கிறார்கள்.
இன்னொரு மூத்த உறுப்பினர் பேசும்போது, மக்கள் அவர்களின் கட்சிக்கு ஓட்டு போடாததால் மக்களுக்கு நல்ல சாவே வராதாம். எனக்கு சத்தியமா புரியல. இதே மக்கள் தான் அவர்களுக்கு 50 - 60 ஆண்டுகளாக வாக்களித்துள்ளனர். அவர்களைப் பார்த்து எப்படி அந்த வார்த்தை சொல்ல மனசு வருது? என்னால் அதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. மக்கள் தீர்ப்பை ஏற்க முடியாத போது, இவர்களை எல்லாம் மக்கள் ஏன் ஏற்க வேண்டும் என்ற கேள்விதானே வரும்.
இது எல்லாவற்றையும் விட கொடுமை என்ன தெரியுமா? ஆபாச நதி, வன்ம நதி பேச்சுகளை எல்லாம், நாங்கள் அந்தக் காலத்துல பேசாத பேச்சா, இதுல என்ன தப்பு இருக்கு என நியாயப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு இது தவறென்றே தெரியவில்லை. ஐயா, பெரியவர்களே, நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வோம். அசிங்கமாக, அவதூறாகப் பேசும் அரசியல் நமக்கு எதற்கு?" என ஆவேசமாகப் பேசியுள்ளார் முதல்வர் விஜய்.
அண்மையில் திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்ரமணியனை தோற்கடித்த சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது. சென்னை சைதாப்பேட்டைக்கு மிகப்பெரிய மருத்துவமனையை மா.சுப்ரமணியன் கொண்டு வந்தார்.நோயாளியின் உறவினர்கள் ஓட்டு போட்டு இருந்தாலே மா.சுப்ரமணியன் வெற்றி பெற்று இருப்பார். இனிமேல் மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். 5 ஆண்டுகளுக்கு ஓய்வெடுப்போம் எனப் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications
