திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய்
சென்னை மார்க்கமாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கனவான ECR மேம்பாட்டுத் திட்டத்தில் தற்போது ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான 13.3 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.2,100 கோடி மதிப்பில் நான்கு வழி உயர்மட்டச் சாலை (Four-Lane Elevated Corridor) அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
ஆனால், இந்தத் திட்டத்தின் ஒப்பந்த (Tenders) கோரப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், திட்ட மதிப்பீடு அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, தற்போதைய விஜய் தலைமையிலான அரசு இந்த மெகா திட்டத்தை முழுமையாக மறுஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.

தேர்தல் அவசரம் காரணமா?
அரசு வட்டாரங்கள் கொடுத்துள்ள தகவல்களின்படி, கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்குச் சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இந்த இசிஆர் உயர்மட்டச் சாலை திட்டத்திற்கான ஒப்பந்தம் அவசர அவசரமாக ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
தற்போது இந்த டெண்டர் நடைமுறைகள் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஒப்பந்தம் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், திட்டத்திற்கான உண்மையான தேவை மற்றும் செலவினங்களை மறுமதிப்பீடு செய்து, புதிய குறைக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டுடன் மறுடெண்டர் விடப்படலாம் என்றும் நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதிப்பீடு தான் பிரச்சனை?
இந்த இசிஆர் திட்டத்தின் மதிப்பீடு ஏன் இவ்வளவு பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது என்பதற்குப் பின்னணியில் ஒரு வலுவான வர்த்தகக் கணக்கீடு உள்ளது. இந்த 13.3 கி.மீ நீளமுள்ள நான்கு வழி உயர்மட்டச் சாலை திட்டத்திற்கு ஒரு கிலோமீட்டருக்குச் சராசரியாக ரூ.157.89 கோடி கட்டுமானச் செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு நேர்மாறாக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணைக்குழு (NHAI), மதுரவாயல் முதல் வெளிவட்டச் சாலை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கத் திட்டமிட்டுள்ள ஆறு வழி (Six-lane) உயர்மட்டச் சாலை திட்டத்திற்கு ஒரு கிலோமீட்டருக்குச் சராசரியாக ரூ.147 கோடி மட்டுமே செலவாகும் என மதிப்பீடு செய்துள்ளது.
மத்திய அரசின் உயர்தர தேவை கொண்ட 6 வழிச் சாலைக்கே இவ்வளவு குறைவான செலவு ஆகும்போது, மாநில அரசின் நான்கு வழிச் சாலைக்குக் கூடுதல் செலவு காட்டப்பட்டுள்ளதுதான் தற்போதைய தணிக்கையில் பிரதான கேள்வியாக உருவெடுத்துள்ளது.
நீதிமன்ற உத்தரவும்.. பில்ட்கான் நிறுவனத்தின் நழுவிய வாய்ப்பும்
இந்தத் திட்டத்தின் டெண்டர் நடைமுறையில் ஆரம்பத்திலிருந்தே குளறுபடிகள் நீடித்து வந்தன. போபாலைச் சேர்ந்த 'பில்ட்கான்' (Buildcon) என்ற உள்கட்டமைப்பு நிறுவனம், தமிழ்நாடு அரசு தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்தை விடச் சுமார் ரூ.500 கோடி குறைவாக (அதாவது மொத்த திட்ட மதிப்பில் 25 சதவீதம் குறைவாக) ஒப்பந்தம் கோரியிருந்தும் தங்களின் ஏலம் விண்ணம் நிராகரிக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பில்ட்கான் நிறுவனம் இது குறித்துப் பத்து நாட்களுக்குள் அரசிடம் முறைப்படி முறையீடு செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TNSHA) அதன் மீது முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், பில்ட்கான் நிறுவனம் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் முறையீடு சமர்ப்பிக்கத் தவறியதால், அப்போது இறுதி செய்யப்பட்ட நிறுவனத்திற்குப் பணி ஆணை (Work Order) வழங்கப்பட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் எதிர்காலம்
இது குறித்துப் பேசியுள்ள நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர், "கடந்த ஆறு மாத காலத்தில் அவசரமாக வழங்கப்பட்ட பெரும்பாலான உள்கட்டமைப்புத் திட்டங்களின் டெண்டர் நடைமுறைகள் தற்போது விரிவான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. திருவான்மியூர் - உத்தண்டி திட்டத்தின் செலவுத் தொகை, அதன் உண்மையான தேவையை விட மிக அதிகமாகக் கணக்கிடப்பட்டுள்ளது துல்லியமாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, முந்தைய திமுக அரசு இறுதி செய்த அதே கூடுதல் விலையில் இந்தத் திட்டம் இது தொடர வாய்ப்பு குறைவு" என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TNSHA) கடந்த பிப்ரவரி மாதம் இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஒப்பந்த விதிகளின்படி, ஒப்பந்தம் வழங்கப்பட்ட 180 நாட்களுக்குள் (அதாவது வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள்) கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும்.
அரசு எவ்வித மாற்றமும் செய்யாமல் அனுமதித்தால் மட்டுமே கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும். ஆனால், தற்போதைய தணிக்கை மற்றும் மறுஆய்வுப் போக்கைப் பார்க்கும்போது, திட்டத்தின் நிதி மதிப்பீடு குறைக்கப்பட்டுப் புதிய டெண்டர் கோரப்படுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. இதனால் இத்திட்டம் முடங்க வாய்ப்புகள் அதிமாக உள்ளது.












Click it and Unblock the Notifications