டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு தாரைவார்க்க திட்டம்? விஜய்க்கு ஆலோசனை சொன்ன ரெட்டி டீம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது புயலைக் கிளப்பியுள்ள மிக முக்கியமான விவாதம், அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார் வசம் ஒப்படைப்பது பற்றியதாகும். முதல்வர் விஜய்க்கு டாஸ்மாக் நிர்வாகத்தை தனியாருக்கு மாற்றுமாறு தொடர்ந்து சில தரப்பிலிருந்து கடுமையான அழுத்தங்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TASMAC

தனியாருக்கு ஏன் கொடுக்க வேண்டும்? எழுந்துள்ள குரல்கள்

விஜய்க்கு நெருக்கமான சில முக்கியப் பிரமுகர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆதரவாளர்கள், அரசு எதற்காக நேரடியாக மதுக்கடைகளை நடத்த வேண்டும் என்ற கேள்வியை முன்வைத்து வருகின்றனர். "அரசே நேரடியாக மதுபானக் கடைகளை நடத்துவதால் தேவையில்லாத கெட்ட பெயர் மட்டுமே மிஞ்சுகிறது. கடைகளை முழுமையாக தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால், அரசு மீது மக்களுக்கு இருக்கும் கோபம் குறையும். இதன் மூலம் பெண்களின் நன்மதிப்பையும், வாக்குகளையும் எளிதாகப் பெற முடியும்" என்று முதலமைச்சரிடம் தொடர்ந்து ஆலோசனைகள் கூறப்பட்டு வருகின்றன.

மதுக்கடைகளால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகப் பெண்கள் மத்தியில் நீண்டகாலமாக இருக்கும் அதிருப்தியைத் தணிக்க இதுவே சரியான வழி என்றும், அரசே கடை நடத்துவதை விட தனியார் நடத்தினால் நிர்வாகச் சுமையும் பழியும் அரசின் மேல் விழாது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

உயர் அதிகாரிகளின் தீவிர எச்சரிக்கை

இருப்பினும், அரசின் அனுபவம் வாய்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த முடிவை எடுத்தால் அது அரசுக்கு மிகப்பெரிய கரும்புள்ளியாக மாறும் என்று அவர்கள் முதலமைச்சரை எச்சரித்துள்ளனர்.

அதிகாரிகள் முன்வைக்கும் முக்கிய எச்சரிக்கைகள்:

1. கள்ளச்சாராயம் பெருகும் ஆபத்து: மது விற்பனை தனியார் கைகளுக்குச் சென்றால், அதிக லாபம் ஈட்டுவதற்காக தரமற்ற மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் புழக்கத்திற்கு வர வாய்ப்புகள் அதிகம். கிராமப்புறங்களில் சட்டவிரோத விற்பனை கட்டுக்கடங்காமல் போகக்கூடும்.

2. விலைக் கட்டுப்பாடு இருக்காது: அரசு கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றாலே மக்கள் கொந்தளிக்கிறார்கள். தனியார் வசம் சென்றால் விலையை வரைமுறையின்றி உயர்த்தி பொதுமக்களைச் சுரண்டும் நிலை உருவாகும்.

3. அரசுக்கு வருவாய் இழப்பு: டாஸ்மாக் மூலம் அரசுக்கு நேரடியாகக் கிடைக்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாயில் கசிவு ஏற்படும்.

4. 23 ஆண்டுகளுக்குப் பின் பின்னோக்கிய முடிவு: கடந்த 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் தனியார் மதுக்கடைகள்தான் இருந்தன. அப்போது நடந்த முறைகேடுகள், கலப்படங்கள் காரணமாகவே அரசு டாஸ்மாக்கை முழுமையாகக் கையில் எடுத்தது. இப்போது மீண்டும் பழைய நிலைக்குச் சென்றால், அது அரசு நிர்வாகத்தின் தோல்வியாகவே பார்க்கப்படும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெண்கள் மத்தியில் ஆதரவு கூடுமா அல்லது எதிர்ப்பு வெடிக்குமா?

தனியாரிடம் ஒப்படைத்தால் பெண்கள் ஆதரவு பெருகும் என்ற வாதத்தை சமூக ஆர்வலர்களும் பல அரசியல் பார்வையாளர்களும் முற்றிலுமாக மறுக்கின்றனர். பெண்கள் எதிர்பார்ப்பது மதுக்கடைகளின் தனியார்மயத்தை அல்ல.. மதுக்கடைகளை படிப்படியாகக் குறைத்து முழு மதுவிலக்கைக் கொண்டுவருவதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

கடைகள் தனியார் கைக்குச் சென்றால், ஊருக்கு ஊர், சந்துக்குச் சந்து சட்டவிரோதக் கடைகள் முளைத்து சமூக அமைதி சீர்குலையும். இது பெண்களின் பாதுகாப்பிற்கு மேலும் பெரும் அச்சுறுத்தலாகவே முடியும் என்று எச்சரிக்கப்படுகிறது.

முதலமைச்சர் விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

ஏற்கனவே வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகில் இருந்த 700-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மூடி, புதிய கட்டுப்பாடுகளை அரசு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. மதுவிலக்குத் துறையில் எந்தவொரு தனியார்மயத் திட்டமும் இல்லை என அமைச்சர் தரப்பில் முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தாலும், உள்வட்டாரங்களில் நடக்கும் இந்த விவாதம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

ஒருபுறம் நெருக்கமானவர்களின் அரசியல் கணக்குகள், மறுபுறம் அனுபவமிக்க அதிகாரிகளின் எச்சரிக்கைகள் என இரண்டுக்கும் நடுவே முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் மிகுந்த நிதானத்துடன் செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தவறான ஒரு முடிவு அரசுக்கு மீள முடியாத அரசியல் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதால், அடுத்தகட்ட முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் எகிறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+