"2 துறை ஃபைல்ஸை ஓபன் பண்ணதுக்கே இப்படி இருக்குன்னா”... கையால் சைகை செய்த முதல்வர் விஜய்!
சென்னை: "2 துறை ஃபைல்களை ஓபன் பண்ணதுக்கே இப்படி இருக்குன்னா.." எனப் பேசிய முதல்வர் விஜய், கையால் சைகை செய்து காட்டினார். மேலும், "ஆதாரம் வேண்டும் எனக் கேட்டார்களே.. ஆதாரம் போதுமா? போதுமா?" என ஆவேசமாக சட்டசபையில் பேசியுள்ளார் முதல்வர் விஜய்.
தமிழக சட்டசபை, மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று மீண்டும் கூடியது. காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் விஜய் பேசினார். முதல்வர் விஜய் பேசுகையில், அமைச்சர்கள், அதிகாரிகள் என யாராக இருந்தாலும் போலீசாரின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் தலையீடு இருக்க கூடாது என வலியுறுத்தி உள்ளேன். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்த அரசின் நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், "1970-ல் வீராணம் திட்டத்திற்கு சத்யநாராயணா கம்பெனிக்கு டெண்டர் வழங்க வேண்டுமெனில் கமஷன் தர வேண்டும் என திமுக அரசில் கேட்கப்பட்டதாக அறிக்கையில் உள்ளது. இதனை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. டெண்டர் வேணும்னா இரண்டரை சதவீதம் கமிஷன் வேண்டும் என முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகன் மாறன் கேட்டதாக சர்க்காரியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்யநாராயணா கம்பெனிக்கு டெண்டர் வழங்க வேண்டி அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார். ஆதாரம் வேணும்னா பார்லிமெண்டுக்கு போக வேணாம். சட்டமன்றத்தில் உள்ள நூலகத்திற்கு செல்லுங்கள். 60 ஆண்டுகளுக்கு முன்பு சர்க்காரியா குழு எழுதிய புத்தகம் இருக்கிறது.
பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் திமுக ஊழல் செய்து வருகிறது. அது குறித்து நான் என்ன சொல்வது? அமலாக்கத்துறையே சொல்லி இருக்கிறது. ஒப்பந்தங்களில் 7.5 % முதல் 10% வரை பார்ட்டி ஃபண்ட் வாங்கியதாக அமலாக்கத்துறை சொல்லி இருக்கிறது. 100 பக்கங்களில் ஒரு ஆதாரத்தை திமுக ஆட்சியில் இருந்தபோதே சொல்லி இருக்கிறது.
3 கோப்புகளை வெளியிட வேண்டும் என திமுக சவால் விட்ட நிலையில், சாம்பிளுக்கே திமுக அரண்டு போயுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். திமுக எதை செய்தாலும் குடும்பத்தோடு தான் செய்வார்கள். கட்சி நிதியைக் கூட சேர்ந்து தான் வாங்கியுள்ளனர். கட்சி நிதி என்ற பெயரில் ரூ.10 முதல் ரூ.100 வரை வாடிக்கையாளர்களிடம் சேகரித்தது திமுக." என்றார்.
மேலும் பேசிய முதல்வர் விஜய், "2 துறை ஃபைல்களை ஓபன் செய்ததற்கே இப்படி என்றால்.." எனக் கூறியபடியே கைகளால் சைகை செய்து காட்டினார். அதைத் தொடர்ந்து, "மற்ற துறைகளை வெளியிட்டால் இன்னும் எத்தனை பூதம் கிளம்பி வருமோ தெரியல.. ஆதாரம் வேண்டும் ஆதாரம் வேண்டும் எனக் கேட்டார்களே.. ஆதாரம் போதுமா? தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும். திமுக இருக்கும் இடத்தில் தான் தவறே நடக்கும்" என முதல்வர் விஜய் ஆவேசமாகப் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications
