ஆரம்பமே சொதப்பிட்டாரா விஜய்? லண்டன் பயணத்தில் அடுத்த ட்விஸ்ட்.. மலேசிய கவர்னர் சொல்லியும் கேட்கலையா?
சென்னை: மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழக முதல்வர் விஜய்யை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அந்த சந்திப்புக்காக முதல்வரின் லண்டன் பயணத் திட்டத்தை மாற்றிக் கொள்ளலாம் என கவர்னர் அர்லேக்கர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், திட்டமிட்டபடியே விஜய் லண்டன் புறப்பட்டு சென்றுவிட்டார். இதை பற்றின எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
தமிழக அரசியல் வட்டாரத்தில் இப்போது கவனம் பெற்றுள்ள இந்த விவகாரத்தின் பின்னணி சுவாரஸ்யமானது. செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14-ம் தேதி வரை 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிக்கிறது.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் டெல்லிக்கு வந்துள்ளார். இந்தியாவின் பார்ட்னர் நாடு என்ற நட்புறவின் அடிப்படையில் மலேசியா இந்த மாநாட்டில் பங்கேற்கிறது.
பிரிக்ஸ் மாநாட்டுக்காக இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர், இந்த பயணத்தின்போது தமிழகத்துக்கும் வர திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னைக்கு வந்து முதல்வர் விஜய்யை நேரில் சந்திக்க அவர் விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்காகவே அவரது பயணத் திட்டத்தில் சென்னை வருகையும் இடம்பெற்றிருந்ததாக தெரிகிறது.
லண்டன் விஜய் பயணம்
இதையடுத்து, மலேசிய பிரதமர் அலுவலகம் சார்பில் முதல்வர் விஜய்யை சந்திப்பதற்கான அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு சுமார் ஒரு வாரத்துக்கு முன்பே தமிழக முதல்வர் தரப்பை அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால், முதல்வர் தரப்பிலிருந்து அதற்கு உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தமிழக கவர்னர் அர்லேக்கருக்கும் மலேசிய பிரதமர் அன்வருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருவதால், அன்வர் கவர்னரை தொடர்புகொண்டு இந்த சந்திப்பு குறித்து பேசியிருக்கிறார். இதையடுத்து, மலேசிய பிரதமர் தன்னை சந்திக்க விரும்புவதாக கவர்னர் அர்லேக்கர் தரப்பில் இருந்து முதல்வர் விஜய்க்கு தகவல் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு முதல்வர் தரப்பில் முக்கிய அதிகாரி ஒருவர், "10-ம் தேதி இரவு முதல்வர் லண்டனுக்கு புறப்படுகிறார். அவர் சென்னைக்குத் திரும்பியதும், மலேசிய பிரதமர் விரும்பும் ஒரு தேதியில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறோம்" என்ற ரீதியில் பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கவர்னர் தரப்பில் வேறொரு ஆலோசனை
ஆனால், இதற்கு கவர்னர் தரப்பில் வேறொரு ஆலோசனை முன்வைக்கப்பட்டதாம்.. அதாவது, ஒரு நாட்டின் பிரதமர், ஒரு மாநிலத்தின் முதல்வரை நேரில் சந்திக்க விரும்பும் நிலையில், முதல்வரின் பயணத் திட்டத்தை மாற்றி அமைப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது? அதனால் அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்ற ரீதியில் கவர்னர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், முதல்வர் விஜய் தரப்பில், "மன்னிக்கவும் சார்... முதல்வரின் பயணம் தமிழகத்திற்குள் இருந்தால் பயணத்தை மாற்றியமைத்துக் கொள்ள லாம். அவரது பயணம் பிரிட்டனில் இருக்கிறது. பிரிட்டனில் இருக்கும் ஒவ்வொரு நாளும் டைட் செட்யூல்ட்!
நிறைய நிகழ்வுகளில் கலந்து ஒப்புக் கொண்டிருக்கிறார் முதல்வர். அதில் முதல்வரின் பிரசன்ஸ் முக்கியமானது. அப்படி முடிவான நிகழ்வுகளை ரத்து செய்யவோ, மாற்றிய மைக்கவோ சாத்தியமில்லை என மறுத்துள்ளனர். இதில் கவர்னர் அப்-செட் ! " என்று தெரிவிக்கிறது கோட்டை வட்டாரம்.
திட்டமிட்டபடி கிளம்பியாச்சு
ஆக, தமிழக கவர்னர் அர்லேக்கரின் சிபாரிசு கூட முதல்வர் விஜய்யின் பயணத்திட்டத்தில் மாறுதலை கொண்டுவர முடியவில்லை. கவர்னர் அர்லேக்கரின் ஆலோசனையையும் மீறி, முதல்வர் விஜய் ஏற்கனவே திட்டமிட்டபடி நேற்று இரவு லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவரது பயணத் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 17-ம் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.
ஒரு நாட்டின் பிரதமர் ஒருவர் தமிழக முதல்வரை சந்திக்க விருப்பம் தெரிவித்த நிலையில், அந்த சந்திப்புக்காக முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை மாற்ற முடியுமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கிறது.
மறுபுறம், ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட சர்வதேச பயண நிகழ்ச்சிகளை மாற்றுவது நடைமுறையில் எவ்வளவு சாத்தியம் என்ற கேள்வியும் உள்ளது. இந்த 2 நிலைப்பாடுகளுக்கு இடையிலான இடைவெளிதான் தற்போது கவர்னர் அர்லேக்கர் மற்றும் முதல்வர் விஜய் தரப்புக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த அரசியல் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கவர்னரின் சிபாரிசு அல்லது ஆலோசனை இருந்தபோதிலும், முதல்வர் விஜய்யின் பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்பதே இந்த விவகாரத்தின் முக்கிய அம்சமாக கோட்டை வட்டாரம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
- நமது சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
