முதலமைச்சர் விஜய்யின் திருச்சி பயணம் திடீர் ரத்து.. விஎஸ் பாபு மறைவால் எல்லா பிளான்களும் கேன்சல்!
சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய்யின் நாளைய திருச்சி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் எம்.எல். ஏ விஎஸ் பாபுவின் மறைவை அடுத்து முதல்வர் விஜய்யின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய், நாளை திருச்சி செல்ல திட்டமிட்டிருந்தார். அங்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 134 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 600 படுக்கைகள் கொண்ட விரிவான மருத்துவ சிகிச்சை கட்டடத்தை திறந்து வைக்க இருந்தார். மேலும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க இருந்தார்.

விஜய் திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் நடத்தப்பட்டு வரும் அரசு ஓட்டலுக்கு சென்று, அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க இருந்தார். மேலும், திருச்சி மாவட்டத்தில் நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் திட்டமிட்டிருந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து புத்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும்போதும், அரசு மருத்துவமனையில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடமான தமிழ்நாடு ஓட்டலுக்கு செல்லும்போதும் முதலமைச்சர் விஜய் சுமார் 16 கி.மீ. தூரத்திற்கு பிரமாண்ட ரோடுஷோ நடத்த திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், தவெகவைச் சேர்ந்த கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவு காரணமாக முதல்வர் விஜய்யின் திருச்சி பயணம் உள்ளிட்ட நாளைய அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் எம்.எல்.ஏவாக இருந்த விஎஸ் பாபு, கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 22 வரை அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், உடல்நலன் தேறி வருவதாகவும் மருத்துவ அறிக்கைகள் வந்தன. அதன்பின் எந்த மருத்துவ அறிக்கையும் வெளியாகவில்லை.
கிட்டத்தட்ட 70 நாட்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் இன்று கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு உயிரை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது எதுவும் பலனளிக்கவில்லை. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.




Click it and Unblock the Notifications
