Vijay Smile: பெஞ்ச் மேல ஏறி நிற்கலாம்! எ.வ.வேலு சொன்னதுமே லேசாக குலுங்கி சிரித்த விஜய்!
சென்னை: தமிழக சட்டசபையில் சபாநாயகரின் கவனத்தை ஈர்ப்பது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் பேசிய போது முதல்வர் விஜய் சிரித்தார். பொதுவாக எ.வ.வேலு காமெடியாக பேசுவதால் அவர் பேசினாலே விஜய் சிரிப்பார்.
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இந்த நிலையில் பால் கொள்முதல் விலையை மேலும் ரூ 3 உயர்த்தி, ரூ 44 ஆக வழங்கப்படும் என தமிழக சட்டசபை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தார்.
பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய்யின் உரைக்கு பிறகு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் பேச முயன்றனர். அதற்கு அனுமதியளிக்க மறுத்த சபாநாயகர். 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட்ட பிறகு எந்த கேள்வியும் கேட்க முடியாது. தெளிவு உரைகளுக்கும் எந்த இடமும் இல்லை என்றார்.
பேரவை நடவடிக்கைகள் நேரலை செய்யப்படுவதால் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் பகுதிகள் கூட சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாகவும் ரீல்ஸ்களாகவும் உலை வருகிறது என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சுட்டிக் காட்டினார். இது அவையின் உரிமையை மீறும் செயல் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அப்போது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறுகையில், நான் திண்டுக்கல்லில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றேன். அப்போது சில இளைஞர்கள் என்னிடம் வந்து சட்டசபை நேரலையை நாங்கள் பார்த்துக வருகிறோம். அதில் எம்எல்ஏ, அமைச்சர்கள் எப்படி செயல்பட வேண்டும், அரசியல் என்றால் என்ன என்பதையும் நாங்கள் தெரிந்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அரசியல் பின்னணி ஏதும் இல்லை. ஆனாலும் அரசியல் குறித்து அறியும் வகையில் நேரலை பயனுள்ளதாக இருக்கிறது என்றனர்.

அப்போது இன்னொரு நபர் என்னிடம் வந்து, உறுப்பினர்கள் பேசுவது அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிடுகிறீர்கள். ஆனாலும் அவை ரீல்ஸ்ஸாக போய்விடுகிறது. ஏன் ஒரு உறுப்பினர் பேசும் போதே அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லாத வகையில் கண்ணியத்துடன் பேச கூடாதா? என கேட்டார்.
அந்தளவுக்கு அவையில் உறுப்பினர்கள் பேசுவதை மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அவை மாண்பை குலைக்கும் எம்எல்ஏக்களை வாரத்தில் அம்பலப்படுத்துவதில் தவறில்லை என மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். எனவே இந்த வாரத்தில் உரிமை மீறல் குழு தேர்வு நடைபெறும்.
எம்எல்ஏக்களை கட்சி கொறடாக்கள் கட்டுப்படுத்த வேண்டும். உட்காருங்கள் உட்காருங்கள் நான் பல முறை சொன்ன பிறகும் மூத்த உறுப்பினர், அமைச்சராக இருந்த ஓ.எஸ்.மணியன் நின்று கொண்டே இருக்கிறார், சட்டசபை இருக்கையை விட்டு எழுந்து வந்து ஓடி வருவது தவறு என ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
அப்போது திமுக கொறடா எ.வ.வேலு கூறுகையில், நீங்கள் சொன்ன கருத்தை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. பேரவைத் தலைவரின் கவனத்தை ஈர்ப்பதற்கு நிற்கலாம். கை தூக்கலாம். உறுப்பினர்களின் குரல் சபாநாயகருக்கு கேட்காத போது முன்னால் வந்து சொல்கிறார்கள் என்றார்.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியிருப்பதாவது: கையை உயர்த்துவதில் தவறில்லை. என் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்றால் குரல் கொடுப்பதில் தவறில்லை. நான் சொல்வது ஒரே நேரத்தில் 10, 15 பேர் எழுந்து நின்று குரல் கொடுத்து இவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று பரிந்துரைப்பது தேவையில்லை.
நானே பார்த்து பார்த்து யாருக்கும் எந்த குறையும் இல்லாமல் வாய்ப்பு தருகிறேன். இருக்கையை விட்டு எழுந்து ஓடி வருவது தவறு என்றுதான் சொல்கிறேன் என்றார்.
உடனே குறுக்கிட்ட எ.வ.வேலு, சட்டசபைத் தலைவர் சொல்வது எப்போதும் விதிக்குள்பட்டுதான் சொல்கிறீர்கள். நாங்களுக்கு விதிக்கு கட்டுப்பட்டுதான் இருக்கிறோம். சில நேரங்களில் எங்களுடைய பக்கத்தில் இருக்கக் கூடிய உறுப்பினர்களின் குரல் உங்களுக்கு கேட்கவில்லை என்றால் பக்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் உதவியாக இருந்து சொல்கிறார்கள்.
அதுதானே தவிர வேறொன்றும் இல்லை. இதே அவையில் சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க பெஞ்ச் மேல் ஏறி நின்று இரண்டு கையை தூக்கி கவனத்தை ஈர்த்துள்ளோம் என்றார். அதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறுகையில், 10 பேர் சேர்ந்து அவரை பேச வைங்க, இவரை பேச சொல்லுங்கள் என பரிந்துரைப்பது எனக்கு பிடிக்காது என்றார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, "இத்தனை ஆண்டுகாலமாக இங்கே இருந்து கையை மட்டும் உயர்த்தினால் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம் என நாங்கள் நம்பிக் கொண்டு இருந்தோம். இன்றைக்குதான் பெஞ்ச் மேல் ஏறியும் கவனத்தை ஈர்க்கலாம் என அண்ணன் எ.வ.வேலு மூலம் அறிய கருத்தை புதிய வழிமுறையை எங்களுக்கு காட்டிக் கொடுத்திருக்கிறார் என்றார்.
சிரித்துக் கொண்டே சபாநாயகர் , "பெஞ்ச் மேல ஏறி நிற்கும் தண்டனையை எல்லாம் நான் வழங்க மாட்டேன்" என சொன்னதும் முதல்வர் விஜய் சிரித்தார்.


Click it and Unblock the Notifications
