பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய்.. வெற்றி பெற்ற பிறகு 2வது முறையாக விசிட்!
சென்னை: தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்குச் சென்ற முதலமைச்சர் விஜய் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். பெரம்பூர் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற பிறகு இரண்டாவது முறையாக தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார் விஜய்.
சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து, பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து வருகிறார்.

சென்னை வியாசர்பாடி, சர்மா நகர் முதலாவது தெருவில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டடம், தற்போதைய நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு புதிய எம்.எல்.ஏ அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. விஜய்யின் எம்.எல்.ஏ அலுவலகம் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு பளிச்சென அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைகளைத் தினசரி கேட்டு நடவடிக்கை எடுப்பதற்காக 10 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, கணினி வசதிகளுடன் தனிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை கடந்த ஜூலை மாதம் விஜய் திறந்து வைத்திருந்தார்.
இந்நிலையில் சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் முதல்வர் ஜோசப் விஜய் இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ரூ. 2.23 கோடியில் கட்டப்பட்ட மாநில ஆய்வக துணைக் கட்டடத்தையும் முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார். அங்கு ரூ. 152 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தையும் பார்வையிட்டார்.
இதையடுத்து முதல்வர் விஜய் தனது சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதிக்குச் சென்றார். பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்துக்குச் சென்ற அவர், அங்கு காத்திருந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மேலும் இ-சேவை மூலமாக விண்ணப்பித்த மக்களுக்கு பல்வேறு சான்றிதழ்களையும் வழங்கினார்.
பெரம்பூர் தொகுதியில் பொதுமக்களிடம் பெறப்பட்ட 2,000 மனுக்களில் 1.300 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
வடசென்னை பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் மழைநீர் தேக்கம் குறித்தும் முதலமைச்சர் விஜய் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.



Click it and Unblock the Notifications
