விஜய்க்கு ஆதரவாக 144 வாக்குகள்.. எதிராக 22 வாக்குகள்.. தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் யார்?
சென்னை: தமிழகச் சட்டமன்றத்தில் இன்று அரங்கேறிய நம்பிக்கை வாக்கெடுப்பு விஜய்க்கு சாதகமாகவே முடிந்துள்ளது. விஜய் அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகள் பதிவான நிலையில், எதிராக 22 வாக்குகளும் நடுநிலையாக 5 வாக்குகளும் பதிவானது. இதன் மூலம் விஜய்யின் 'சர்க்கார்' இப்போது எந்தச் சிக்கலும் இன்றிப் பயணிக்கத் தயாராகிவிட்டது. எந்தக் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளனர் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
விஜய் தனது முதல் அக்னிப் பரீட்சையில் பாஸ் ஆகிவிட்டார். இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மைக்குத் தேவையான மேஜிக் நம்பரைத் தாண்டி வாக்குகளைப் பெற்றார். விஜய்யின் இந்த வெற்றிக்குப் பின்னால் பல சுவாரஸ்யமான கூட்டணிக் கணக்குகள் ஒளிந்துள்ளன.

விஜய்யின் இந்தப் பிரம்மாண்ட வெற்றிக்குக் கை கொடுத்தவர்களின் பட்டியலைக் குறித்து நாம் பார்க்கலாம். விஜய் அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகள் பதிவான நிலையில், எதிராக 22 வாக்குகளும் நடுநிலையாக 5 வாக்குகளும் பதிவானது.
தவெக (105): இரண்டு தொகுதிகளில் வென்றதால் விஜய் தனது ஒரு தொகுதியை ராஜினாமா செய்துள்ளார். ஒரு தவெக எம்.எல்.ஏ வெற்றி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அவர் வாக்களிக்கவில்லை. சபாநாயகர் வாக்களிக்க முடியாது என்பதால் தவெகவின் பலம் 105ஆகப் பதிவாகியுள்ளது.
இது தவிர காங்கிரஸ் (5), இடதுசாரிகள் (4), விசிக (2), ஐயுஎம்எல் (2) ஆதரவாக வாக்களித்தனர். அமமுகவின் 1 எம்எல்ஏவும் தவெகவுக்கு ஆதரவு அளித்தார். இது தவிர அதிமுகவில் கேம் சேஞ்சராக இருந்தது எஸ் பி வேலுமணி- சி.வி. சண்முகம் தரப்பு தான். எடப்பாடியின் எச்சரிக்கையை மீறி 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்ததுதான் விஜய்யை 140-ஐ தாண்ட வைத்தது.
மறுபுறம், ஒரு காலத்தில் சட்டமன்றத்தையே ஆட்டிப்படைத்த அதிமுகவில் எடப்பாடி தரப்புக்கு ஆதரவாக இன்று வெறும் 22 வாக்குகள் பதிவானது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் இருந்த 47 எம்.எல்.ஏ-க்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (25 பேர்) தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததால் எதிராக வெறும் 22 வாக்குகள் மட்டுமே பதிவானது.
பாமக 5 எம்.எல்.ஏக்கள் மற்றும் பாஜகவின் ஒரு எம்எல்ஏ நடுநிலை வகித்தார்.. வைகோவின் மதிமுக இன்றைய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இவற்றுக்கும் மேலாக, 59 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட திமுக 'வெளிநடப்பு' செய்திருந்தது.












Click it and Unblock the Notifications