விஜய் ராஜதந்திர முடிவு.. பிடிஆர், தங்கம் தென்னரசு வரிசையில்.. நிதியமைச்சராகும் செங்கோட்டையன்!
தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில், ஒவ்வொரு அமைச்சருக்கும் எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சென்னை லோக் பவன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது மூலம் புதிய அரசின் செயல்பாடுகளுக்கு தெளிவான திசையை வழங்கியுள்ளது.

நிதியமைச்சர் பொறுப்பு செங்கோட்டையனுக்கு
விஜய் தலைமையிலான அமைச்சரவை அறிவிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிதியமைச்சர் பொறுப்பு, அனுபவம் மிக்க தலைவரான கே.ஏ. செங்கோட்டையன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விஜய் சரியான முடிவை எடுத்துள்ளார் என பலரும் பாராட்டி வருகின்றனர். காரணம் நிதிதுறை என்பது அனைத்து துறையின் வளர்ச்சியையும் இதை நம்பியிருப்பது மட்டும் அல்லாமல் நிர்வாக திறனமும், முன் அனுபவமும் இருந்தால் மட்டுமே இத்தகைய முக்கியமான துறையை கையாளமுடியும் என விஜய்-க்கு புரிந்த காரணத்தால் அனுபவசாலியான செங்கோட்டையன்-க்கு இப்பதவி கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆரம்பக்கட்டத்தில் நிதியமைச்சக துறையை விஜய் ஏற்று நடத்துவதாக பேச்சு இருந்த நிலையில், கடந்த 5 நாள் பல்வேறு ஆலோசனை கூட்டத்தின் இறுதியில் செங்கோட்டையன்க்கு நிதியமைச்சக பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த முடிவு புதிய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான திட்டங்கள் மற்றும் மக்கள் நலனுக்கான பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அமைச்சர் பதவியேற்கும் போது முதல்வர் விஜய் எழுந்து நின்று மரியாதை செலுத்திய நெகிழ்ச்சியான தருணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
செங்கோட்டையன், அதிமுகவில் சூப்பர் சீனியராக இருந்து தற்போது தவெக-வை அவை முன்னோராக வழிநடத்துகிறார்.
அதிமுகவில் அமைச்சர் பொறுப்புகள்
அதிமுக அமைச்சரவையில் செங்கோட்டையன் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 1991 முதல் 1996 வரையிலான ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். இறுதியாக 2016 முதல் 2021 வரையிலான எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றிருந்தார். இந்தப் பொறுப்புகள் அவரது நிர்வாக அனுபவத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
9 முறை எம்எல்ஏ
செங்கோட்டையன் தமிழக அரசியலில் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். எம்ஜிஆரின் முதல் ஆட்சிக் காலத்தில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 ஆம் ஆண்டு முதல் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். 1980 முதல் இன்று வரை அதே தொகுதியில் போட்டியிட்ட அவர், 1996 ஆம் ஆண்டில் மட்டும் தோல்வியைச் சந்தித்தார். மற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று தொடர் சேவையை வழங்கி வருகிறார்.
கே.ஏ. செங்கோட்டையனின் அரசியல் பயணம்
கே.ஏ. செங்கோட்டையன் 1948 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் கிராமத்தில் பிறந்தார். தனது அரசியல் பயணத்தை திமுகவில் தொடங்கிய இவர், 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டபோது அவருடன் இணைந்து வெளியேறிய முக்கியமான நபர்களில் இவரும் ஒருவர்.
எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவில் சேர்ந்த உடனேயே எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். 1975 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடித்ததன் மூலம் எம்.ஜி.ஆரின் நற்பெயரைப் பெற்றார்.
அந்த விழா மேடையிலேயே எம்ஜிஆர் அவருக்கு ஒரு பிளாங்க் செக்கை வழங்க முயன்றபோது, அதை வாங்க மறுத்த செங்கோட்டையன் எம்ஜிஆருடன் இன்னும் நெருக்கமான உறவைப் பேணினார். அந்த நெருக்கம் பின்னர் பிரசாரப் பயணங்களிலும் தொடர்ந்தது.
ஜெயலலிதா அணியில் இணைப்பு
எம்ஜிஆர் மறைந்த பிறகு 1989 ஆம் ஆண்டு அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தபோது, ஜெயலலிதா அணியில் இணைந்த செங்கோட்டையன் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழக அரசியல் வரலாற்றில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் துரைமுருகன் வரிசையில் அதிக முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்களில் ஒருவரான செங்கோட்டையன், அதிமுகவில் சூப்பர் சீனியராக இருந்தார்.
தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) முன்னோராக வழிநடத்தி வருகிறார். அவரது நீண்டகால அரசியல் அனுபவம் புதிய அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்புக்கு பெரும் பலத்தை அளிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications