கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்.. ரூ.20 கோடி ஒதுக்கிய சிஎம்டிஏ.. பயணிகள் குறை எப்போது தீரும்?
சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே புதிய ரயில்நிலைய கட்டுமானப்பணிகள் தொடங்க உள்ள நிலையில் அதற்காக முதற்கட்டமாக சிஎம்டிஏ ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மாநில நிதியில் கட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதற்காக தினசரி ஆயிரக்கணக்கான அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் வந்து செல்வதால் சென்னை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏற்கனவே சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், வரும் காலத்தேவையை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு எந்த வித அடிப்படை வசதிகளும் செய்யப்படாமலேயே அவசரகதியில் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எந்த பேருந்து எந்த இடத்தில் நிற்கிறது என்று கூட கண்டுபிடிக்க முடியாமல் 1 மணி நேரம் சுற்றி வருவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும் என்பது பயணிகளின் குற்றச்சாட்டாகும்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் நிலையம் மற்றும் ஆகாய நடைபாதை அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்திருந்தது. அதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்தது.
பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே ரயில் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 நடைமேடைகளுடன் ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் எளிதாக வந்து செல்ல வசதியாக புதிய ரயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கான வரைபடம் தயார் செய்யும் பணியில் தெற்கு ரயில்வே தீவிரமடைந்துள்ளது. இதற்கான ரூ.20 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என தகவல் வெளியானது.
கிளாம்பாக்கத்தில் ஆகஸ்ட் மாதத்திற்குள் ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை முடிக்கவும் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் ரயில் நிலைய பணிகளை விரைவில் முடிக்கும் வகையில் சிஎம்டிஏ ரூ.20 கோடியை ரயில்வே நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் தமிழ்நாடு அரசின் பங்களிப்போடு அமைக்கும் பணிகள் விரிவு படுத்தப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் கிளாம்பாக்கம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. வண்டலூர் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் 12 பெட்டிகள் உடைய ரயில் நிற்கும் வகையில் , மூன்று நடைமுறைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் நிலைய மேலாளர் அறை, ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், டிக்கெட் அலுவலகம் ,குடிநீர் வசதி, இருக்கை வசதி என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரயில்வே நடைமேடைகளில் சிறுசிறு கடைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய ரயில் நிலையம் என்பதால் பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பணிகள் எல்லாம் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து மின்சார ரயில்களும் கிளம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கூடுதலாக பயணிகள் கிளாம்பாக்கத்திற்கு வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு , அதற்கு ஏற்றார் போல் 30 சதவீதம் வரை, கூடுதல் மின்சார ரயில்களை , சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?












Click it and Unblock the Notifications