கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களை.. மீண்டும் நிராகரித்த மத்திய அரசு! இந்த முறை சொன்ன காரணத்தை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: சென்னையை தொடர்ந்து கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்க, தமிழக அரசு அனுமதி கேட்டிருந்த நிலையில், மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் தற்போது இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

சென்னை என்றாலே டிராபிக் ஜாம்தான் நினைவுக்கு வரும். ஆனால், மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட பின்னர், டிராபிக் நெரிசலில் சிக்காமல் மக்களால் குறிப்பிட்ட இடங்களுக்கு வேகமாக போக முடிந்தது.

Metro
Coimbatore Madurai Metro

இப்போது சென்னை மாதிரியே கோயம்புத்தூர், மதுரை நகரங்கள் வளர்ந்து வருகின்றன. அங்கும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. எனவே இந்த பிரச்சனையை சரி செய்ய புதிய மெட்ரோ ரயில் நிலையங்களை இந்த இரண்டு நகரங்களுக்கு கொண்டு வர தமிழக அரசு அனுமதி கேட்டிருந்தது. ஆனால், இந்த கோரிக்கை தற்போது இரண்டாவது முறையாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு சொன்ன காரணங்கள்

மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பது என்பது பெரிய செலவு பிடித்த வேலை. எனவே உண்மையாகவே அங்கு மெட்ரோ ரயிலுக்கான தேவை இருக்கிறதா? என்பதை உறுதி செய்த பின்னர்தான் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது. சரி அப்படியெனில், மெட்ரோவுக்கான தேவை இருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

2017ம் ஆண்டின் மெட்ரோ ரயில் கொள்கையின்படி, ஒரு நகரத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருந்தால் மட்டுமே.. அந்நகரம் மெட்ரோ சேவையை பெற தகுதியான நகரமாக.. மெட்ரோ ரயில் தேவை உள்ள நகரமாக கணக்கில் கொள்ளப்படும்.

தகுதி என்ன?

பிரச்சனை என்னவெனில், ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசால் மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011ம் ஆண்டுடன் நின்றுவிட்டது. 2011 நிலவரப்படி கோவையின் மக்கள் தொகை 15.84 லட்சம். மதுரையில் 15 லட்சத்திற்கும் குறைவான மக்களே இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால், இதை நிரூபிக்க முடியவில்லை. எனவே, இந்த இரண்டு நகரங்களும் மெட்ரோ சேவையை பெற தகுதியற்ற நகரங்களாக மத்திய அரசு கூறுகிறது.

போதுமான மக்கள் தொகை இல்லாததால், போக்குவரத்து நெரிசல் இருக்காது.. எனவே மெட்ரோவில் பயணித்து நேரத்தை சேமிக்க முடியாது. மேலும் எதிர்பார்க்கப்படும் பயணிகளின் எண்ணிக்கையும் இருக்காது என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.

மாற்று வழி

இதைவிட முக்கியமான விஷயம், மெட்ரோ ரயில் சேவை திட்டம் என்பது அதிக நிதியை கோரும் திட்டங்களாகும். எனவே நீண்ட கால நிலைத்தன்மையை ஆராய்ந்தே ஒப்புதல் அளிக்க முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. எனவே கோயம்தூர், மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என்றும், இதற்கு பதிலாக விரைவு பேருந்து போக்குவரத்து முறையை அமல்படுத்துங்கள் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

தமிழக அரசின் வாதம்

என்னதான் போதுமான மக்கள் தொகை இல்லை என்று மத்திய அரசு கை விரித்தாலும், தமிழக அரசு சில வாதங்களை முன்வைத்திருந்தது. அதாவது தமிழ்நாடு என்பது இந்தியாவில் அதிக அளவில் நகரமயமாக்கப்பட்ட மாநிலம். அதிலும் கோயம்புத்தூர் தொழில்மயமாக்கப்பட்ட நகரம். இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மதுரை ஆன்மீக சுற்றுலா நகரமாக இருக்கிறது. எனவே, இங்குள்ள நிரந்தர மக்கள் தொகையை மட்டும் கணக்கில் எடுக்காமல், தினமும் வந்து செல்லும் லட்சக்கணக்கான மக்களை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று வாதங்களை தமிழக அரசு முன் வைத்தது.

தமிழகத்திற்கு மறுக்கப்படும் மெட்ரோ

ஆக்ரா, போபால், பாட்னா, ஜெய்ப்பூர் மற்றும் இந்தூரை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கேயும் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் கூட மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்பட்டது. ஆனால், எங்க ஊர் என்று வரும்போது மட்டும் மக்கள் தொகையை காரணம் காட்டி மறுப்பதா? என்று தமிழ்நாடு கேள்வி எழுப்பியிருந்தது.

இவ்வளவு வாதங்களை வைத்தும் கூட.. மத்திய அரசு கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் சேவை திட்டங்களுக்கு இரண்டாவது முறையாக அனுமதி மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+