வயிறு எரியுது.. ஒரு கேஸ் சிலிண்டர் 7,000 ரூபாயா? விண்ணை முட்டும் விலை.. க்ளோஸ் ஆகும் ஹோட்டல்கள்!
சென்னை: தமிழகத்தில் வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரமடைந்து வரும் நிலையில், வெளிச்சந்தையில் ஒரு சிலிண்டர் ரூ.7,000 வரை முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாக வணிகர்கள் மற்றும் தொழில்துறையினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் சிறு, குறு தொழில்கள் முதல் பெரிய உணவகங்கள் வரை பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற பெரிய நகரங்களில் ஆயிரக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் இயங்கி வருகின்றன. தெருவோர தேநீர் கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகள் வரை தினசரி செயல்பாடுகளுக்கு வணிக காஸ் சிலிண்டர் அத்தியாவசியமாக உள்ளது.

ஆனால் கடந்த சில நாட்களாக சிலிண்டர் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பலரும் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு சிலிண்டரை முறையாக பதிவு செய்து பெற்ற பிறகு, அது சில நாட்களிலேயே முடிந்து விடுகிறது.
வணிக கேஸ்
அதன் பிறகு புதிய சிலிண்டரை பதிவு செய்தாலும் உடனடியாக கிடைப்பதில்லை. இதனால் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளை நிறுத்த முடியாத சூழலில், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு சிலிண்டர்களை வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பல இடங்களில் சிலர் ஏஜெண்ட்களாக செயல்பட்டு கமிஷன் பெற்று சிலிண்டர்களை வழங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விலை உயர்வு
தற்போது ஒரு வணிக சிலிண்டர் ரூ.5,500 முதல் ரூ.7,000 வரை விற்பனை செய்யப்படுவதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த விலை உயர்வு நேரடியாக உணவுப் பொருட்களின் விலையையும் பாதித்துள்ளது. ஹோட்டல்கள் மற்றும் சிறிய உணவகங்களில் பரோட்டா, சப்பாத்தி போன்ற உணவுகளின் விலை ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
கூடுதல் சுமை
அதேபோல் தோசை உள்ளிட்ட பல உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பொதுமக்கள் தினசரி செலவுகளிலும் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல தொழிலாளர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு உணவு சமைக்க வீட்டு உபயோக சிலிண்டர்களையே பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
உற்பத்தி பாதிப்பு
சில இடங்களில் 5 கிலோ எடையுள்ள சிறிய சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். வீட்டு சிலிண்டர்களின் விலையும் அதிகரித்து வருவது அவர்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது. தொழில் முனைவோர் தரப்பில் இருந்து வரும் தகவலின்படி, முன்பு சந்தையில் ரூ.1,850 அளவில் கிடைத்த வணிக காஸ் சிலிண்டர், பின்னர் ரூ.3,500 மற்றும் ரூ.5,000 வரை உயர்ந்தது. தற்போது சில இடங்களில் ரூ.7,000 வரை விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பல தொழில்களில் காஸ் பயன்பாடு அதிகமாக இருப்பதால், அந்த துறைகளிலும் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்
வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், வணிக பயன்பாட்டில் ஏற்பட்ட தட்டுப்பாட்டிற்கு சில தனியார் நிறுவனங்கள் சேவையை நிறுத்தியதே ஒரு முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளனர். அந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் தற்போது அரசுத் துறைகளை நாடி வருவதால், தேவைக்கு ஏற்ப உடனடியாக வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் எர்பொருள் நிறுவன அதிகார்கள்.
அதிக விலை
மேலும், முறைகேடாக அதிக விலைக்கு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க மாவட்ட அளவில் அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாகவும், சட்டவிரோத விற்பனைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், வெளிப்படையான மற்றும் போதுமான விநியோக முறையே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். தற்போதைய நிலை நீடித்தால், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் செயல்பட முடியாத நிலை உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications