நடிகைக்கு வந்த காதல்.. கிளம்பிய பஞ்சாயத்து.. யார் அந்த துணை நடிகர்? போலீஸில் பரபரப்பு புகார்
சென்னையில் துணை நடிகைக்கு மிரட்டல் விடுத்த துணை நடிகர் மீது புகார்
சென்னை: தனுஷ் படத்தில் நடித்த துணை நடிகை மீது சக துணை நடிகர் ஒருவர் அவதூறு பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பூந்தமல்லியை சேர்ந்த துணை நடிகைதான் ஆர்த்தி. தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் துணை நடிகையாக நடித்திருக்கிறார். இவருடன் நடித்த சக துணை நடிகரான முத்துபிரசாத் என்பவருடன் ஆர்த்திக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் ஆர்த்திக்கு ஏற்கெனவே ஒரு வருடத்திற்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. ஆனால் இந்த திருமணத்தில் ஆர்த்திக்கு உடன்பாடு இல்லை.
மறுபுறம் முத்துபிரசாத்துடனான காதலும் நீண்டுக்கொண்டே வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆர்த்தியின் வீட்டில் ஏற்கெனவே நிச்சயம் செய்த மாப்பிள்ளையோடு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்பார்க்காத ஆர்த்தி, தனது காதலன் முத்து பிரசாத்திடம் விஷயத்தை கூறி தன்னை வந்து பெண் கேட்குமாறு தெரிவித்துள்ளார். முத்துபிரசாத் பெரிய பொருளாதார பின்புலம் கொண்ட ஆள் கிடையாது.

காதல்
எனவே பெண் கேட்க சென்றால் எங்கு தன் மீது தாக்குதல் தொடுக்கப்படுமோ என பயந்து வரமாட்டேன் என்று கூறியுள்ளார். மட்டுமல்லாது எப்படியும் இந்த காதலுக்கு வீட்டில் எதிர்ப்புதான் கிளம்பும் எனவே நாம் தனியாக சென்று திருமணம் செய்துகொள்ளலாம் என கூறியிருக்கிறார். இதற்கு ஆர்த்தி உடன்படவில்லை. மட்டுமல்லாது தனது வீட்டிலும் இதுபோன்று முத்துபிரசாத் என்பவரை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரம் ஏற்கெனவே நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு தெரிய வந்துள்ளது. ஆத்திரமடைந்த மாப்பிள்ளை ஆர்த்தியை கடுமையாக தாக்கியிருக்கிறார்.

திருமணம்
இதனையடுத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஓரு வாரத்திற்கு முன்னர்தான் இப்பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு முத்துப்பிரசாரத் தன்னுடைய நண்பர் ஒருவருடன் வந்திருக்கிறார். இதில் ஆர்த்திக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை முத்துபிரசாத்தையும் அவருடைய நண்பனையும் கடத்தி சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் முத்துபிரசாத் படுகாயமடைந்துள்ளார். அவருடைய நண்பர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முத்துபிரசாத்தின் உறவினர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

புகார்
இவையெல்லாம் நடந்து ஒரு வாரம் ஆகியுள்ளது. தற்போது துணை நடிகை ஆர்த்தி முத்துபிரசாத் மற்றும் அவருடைய சகோதரர் மீது புகார் அளித்திருக்கிறார். புகாரில், "எனக்கும் ஜெகன் என்பவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்படி இருக்கையில் ஒரு படத்தில் நடிக்கும்போதுதான் நான் முத்துபிரசாத்தை சந்திக்க நேர்ந்தது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம். ஆனால் சமீப நாட்களாக நான் அவரை காதலிப்பதாக அவருடைய நண்பர்கள் மத்தியில் சொல்லி வைத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சயடைந்த நான் அவரை கண்டித்தேன். எனவே என்னை பழிவாங்கும் நோக்கத்துடன் என்னை பற்றி அவதூறாக தகவல்களை பரப்பி வருகிறார்.

வழக்குப்பதிவு
கடந்த 13ம் தேதி என்னுடைய செல்போன் எண்ணுக்கு அழைத்த முத்துபிரசாத்தின் சகோதரர் நவீன், என்னையும் எனது கணவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இது தொடர்பாக குறுஞ்செய்திகளையும் அனுப்பியுள்ளார். எனவே எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள பூந்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துணை நடிகைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது












Click it and Unblock the Notifications