ஆடி மாசம் தனியா இருங்க.. மனைவியை பிரித்து அழைத்து சென்ற மாமியார்.. மாப்பிள்ளைக்கு ட்விஸ்ட்
சென்னை : காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை ஆடி மாதம் என கூறி அவரது தாய் அழைத்து சென்றார். ஆனால், ஆடி முடிந்த பின்னர் அனுப்பிவைக்காமல் மறைத்து வைத்திருக்கிறாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
காதல் திருமணம் செய்த தம்பதியை பெற்றோர்கள் சிலர் ஏற்பது இல்லை. சிலர் பிரித்து வைக்க பலமுயற்சிகளை மேற்கொள்கிறார்கள். குறிப்பாக சாதி மாறி திருமணம் செய்தவர்கள் என்றால், பெரும் சவாலை சமூகத்தில் சந்திக்க வேண்டி உள்ளது. அப்படிப்பட்ட சிக்கலை தான் சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவர் சந்தித்துள்ளார்.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஜோதி,திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த சுமத்ரா என்ற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக சுமத்ராவின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனினும் ஜோதி -சுமத்ரா ஜோடி பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, வீட்டை விட்டு வெளியேறி, காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். காதல் திருமணத்திற்கு பின்னர் தனியாக ஜோதி -சுமத்ரா ஜோடி வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், சுபத்ராவின் தாய் மற்றும் அவரது உறவினர்கள், சமாதான முறையில் பேசுவதாகக் கூறி, ஆடி மாசம் என்பதால், சுமத்ராவை அழைத்துச் செல்வதாக கூறி உள்ளனர்.
இதனை நம்பிய கணவர் ஜோதி, மனைவியை அனுப்பி வைத்த நிலையில், வீட்டில் அவருக்கு வேறொரு திருமணம் செய்து வைக்க சுமத்ராவின் உறவினர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுமத்ராவின் கணவர் ஜோதி, தனது மனைவியை மீட்டுத் தரக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜோதி புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications