சென்னையில் அதிரடி.. போதைப்பொருள் விற்க உடந்தை.. 22 காவலர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
சென்னை: சென்னையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை தடுக்காமல் உடந்தையா செயல்பட்ட 6 உதவி ஆய்வாளர்கள் உள்பட மொத்தம் 22 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ‛ஆபரேஷன் கஞ்சா 2.0' என்ற பெயரில் தொடர் போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதில் ஏராளமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, கஞ்சா பதுக்கியவர்கள், கஞ்சா கடத்தியவர்கள், கஞ்சா விற்பனை செய்தவர்கள் என பலரையும் சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதற்கிடையே தான் சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சில இடங்களில் போதைப்பொருள் விற்பனை குறித்து அறிந்தும் கூட போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக செயல்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவில் உடந்தையாக செயல்படும் போலீசாரை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தான் தற்போது சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையை தடுக்காமல் உடந்தையாக செயல்பட்ட 22 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள், 14 காவலர்கள் என மொத்தம் 22 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ராத்தோர் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் போதைப்பொருள் விற்பனைக்கு துணைப்போகும் அதிகாரிகள், காவலர்கள் அச்சமடைந்துள்ளனர். அதோடு இந்த நடவடிக்கை மூலம் போலீசாருக்கு நேரடியாக சந்தீப் ராய் ராத்தோர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
அதாவது சென்னையில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முழுவீச்சில் செயல்பட வேண்டும். மாறாக உடந்தையாக செயல்பட்டால் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை அவர் வெளிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications