சீட் பிடிக்க சண்டை! சென்னை எம்டிசி பஸ்சில் ரத்தம் வர அடித்து கொண்ட பயணிகள்.. அதிர்ந்த நுங்கம்பாக்கம்
சென்னை: சென்னை மாநகர பேருந்தில் பயணித்த இரண்டு பயணிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இருக்கைக்காக இரு பயணிகளும் ரத்தம் வரும் அளவுக்கு மோதிக்கொண்டது சக பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்துகள் இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறுவதை வழக்கமாக பார்க்க முடியும். பஸ்கள் வந்து நிற்கும் முன்பாக சில பயணிகள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு ஓடிப்போய் இடம் போடுவார்கள்.. அதேபோல், ஜன்னல் ஓரமாக பையை போட்டும் இடம் பிடிக்கும் நிகழ்வுகளை பார்க்க முடியும்.

சில நேரங்களில் சீட் பிடிப்பதில் பயணிகளுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பிறகு கண்டக்டர், சகபயணிகள் சமாதானப்படுத்தும் காட்சிகளும் தினம் தோறும் எதாவது ரூட்டில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதும் சென்னையில் பல பேருந்துகளில் இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்து இருக்க முடியும்.
இந்த நிலையில் தான் இன்று சென்னையில் பேருந்தில் இடம் பிடிப்பது தொடர்பாக இரு பயணிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. ரத்தம் சொட்ட சொட்ட பயணிகள் இருவர் அடித்துக்கொண்டதால் சகபயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். சென்னையில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை பிராட்வேயில் இருந்து கலைஞர் நகர் நோக்கி 17 டி என்ற மாநகர பஸ் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பாதி பயணிகள் நின்றபடி பயணம் செய்துகொண்டிருந்தனர்.
அப்போது இருக்கையில் இருந்த பயணி அவரது பேருந்து நிறுத்தம் வந்ததும் இறங்கி சென்றார். இதனால் காலியான அந்த இருக்கையில் அமர்வதற்கு நின்றுகொண்டிருந்த இரு பயணிகள் போட்டி போட்டனர். முதலில் நான் தான் உட்கார்ந்தேன் என்றும், இல்லை நான் தான் அமர்வேன் என்று இரு பயணிகளும் வாக்கு வாதம் செய்தனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி சரமாரியாக தாக்க தொடங்கினர். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சக பயணிகளும் இதை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சிக்குள்ளாகினர். எனினும் இந்த இரு பயணிகளும் எதையும் பொருட்படுத்தாமல் மாறி மாறி ஒருவை ஒருவர் தாக்கினர்.
இதில் ஒரு பயணிக்கு முகத்தில் இருந்து ரத்தம் கொட்ட தொடங்கியது. இதனால் பயணிகள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து பஸ் கண்டக்டரும் சண்டையை விலக்கி விட முயற்சித்தார். எனினும் ரத்தம் வரும் அளவுக்கு மோதல் உண்டானதால் உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தினார். தொடர்ந்து இரு பயணிகள் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து அந்த பஸ் 45 நிமிடங்கள் தாமதமாக மீண்டும் புறப்பட்டு சென்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பேருந்தில் இருக்கைக்காக ரத்தம் வரும் அளவிற்கு இரு பயணிகள் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications