ஜெய்பீம் திரைப்பட விவகாரம்- நடிகர் சூர்யாவை அச்சுறுத்த அனுமதிக்கக் கூடாது: ஜோதிமணி எம்.பி.
சென்னை: ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவை அச்சுறுத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று லோக்சபா எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தி உள்ளார்.
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக கூறி நடிகர் சூர்யா ரூ5 கோடி இழப்பீடு தர வேண்டும் என வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சனையில் தமது ரசிகர்கள் எந்த எதிர்வினையும் ஆற்றக் கூடாது என நடிகர் சூர்யா அறிவுறுத்தி இருந்தார்.
தற்போது நடிகர் சூர்யாவுக்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவு வலுத்து வருகிறது. சமூக வலைதளங்களில் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் #weStandwithSurya #JaiBheem ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்காகின.

சூர்யாவுக்கு ஜோதிமணி எம்.பி. ஆதரவு
இந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஜோதிமணி எம்.பி. வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ஜெய்பீம் மனசாட்சியை உலுக்கும் ஒரு மகத்தான திரைக்காவியம். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு சமூக அநீதியை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஆட்சியாளர் உள்ளிட்ட பலரையும் செயல்பட தூண்டியிருப்பதில் உள்ளது அதன் மாபெரும் வெற்றி

அச்சுறுத்தல் கூடாது
ஒரு கலைப்படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும் அல்லது இருக்கக்கூடாது என்கிற விதியை யாரும் வகுக்க முடியாது. அது ஒரு படைப்பாளியின் சுதந்திரம். என்றபோதிலும் அதை கையாள்வதற்கு அரசு அமைப்புகளும் உள்ளன. தனிநபரோ, அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ கலைஞனை அச்சுறுத்த முடியாது. அச்சுறுத்தவும் கூடாது.

தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது
ஒரு கலைப்படைப்பின் நோக்கம் காட்சிப்படுத்துதலே. அதை தாண்டியும் ஒரு படைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும்போது அது மகத்தான படைப்பாக மாறுகிறது. கொண்டாடப்படுகிறது. இப்படியொரு படைப்பை உருவாக்கியவர்கள் கொண்டாடப்படவேண்டியவர்கள். அவர்களை அச்சுறுத்துவது ஆபத்தானது.இதை தமிழக அரசு அனுமதிக்ககூடாது.

பொறுப்பு உணர வேண்டும்
அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் தங்கள் எல்லைகளையும், பொறுப்புகளையும் உணர்ந்து செயல்படவேண்டும். என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலையிலிருந்து வெளியில் வரவேண்டும். இன்றைய சமூகம் நம்மிடமிருந்து ஆக்கப்பூர்வமான பங்களிப்பையே எதிர்பார்க்கிறது. அரசியலின் பெயரால் இம்மாதிரியான அச்சுறுத்தல்களில் ஈடுபடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் முடிந்துவிட்டது.

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு
நடிகர் சூர்யாவை அச்சுறுத்துவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கலைபடைப்புகளை ஒரு சமூகமாக நாம் திறந்தமனதோடு எதிர்கொள்ளவெண்டும். நல்ல படைப்புகளை ஊக்குவிக்கவேண்டும். இந்த நேரத்தில் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவினரோடு நிற்பது நமது கடமை. இவ்வாறு ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications