கூட்டணி ஆட்சி முழக்கம் மொத்தமா மங்கிப் போச்சு.. காங்கிரஸ் தலைகளுக்கு செக் வைத்த திமுக!
சென்னை: காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்து கூட்டணி ஆட்சி தொடர்பான குரல்கள் எழுந்து வந்த நிலையில், நேற்று முதல், அந்த முழக்கம் மங்கியுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கியது திமுக. சீட் ஒதுக்கீடு பேச்சு உச்சகட்டத்தை அடையத் தொடங்கியது முதலே கூட்டணி ஆட்சி குரல்கள் நின்றுவிட்டன.
சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளன. குறிப்பாக ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

விஜய் கிளப்பிய பூதம்
நடிகர் விஜய் கட்சி தொடங்கி முதல் மாநாட்டிலேயே, ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு தரப்படும் என்றும் தெரிவித்தார் விஜய். விஜய்யின் இந்தப் பேச்சு பல்வேறு கட்சிகளுக்கும் தரப்படும் ஆஃபராக பார்க்கப்பட்டது. ஆட்சியில் பங்கு என்ற விஜய்யின் டிரம்ப் கார்டு பல கட்சிகளை அவரது கூட்டணியில் இணைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வரை எந்தக் கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேரவில்லை.
எனினும், விஜய்யின் அந்தப் பேச்சுக்கு பிறகு திமுக கூட்டணியிலும் சரி, அதிமுக கூட்டணியிலும் சரி, ஆட்சியில் பங்கு என்ற குரல்கள் தீவிரமாக எழுந்தன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியில் பங்கு என்ற குரலுக்கு ஆதரவு தெரிவித்தன. அதேபோல, அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை பாஜக ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
ஆட்சியில் பங்கு
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்பு ஆட்சியில் பங்கு என்பதை வரவேற்றிருந்தார். புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி என அறிவித்து பரபரப்பைக் கிளப்பி இருந்தனர்.
இந்தச் சூழலில், திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது ஒத்து வராது என்றும், ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்தக் கோரிக்கை கூட்டணியில் முறிவு ஏற்படுத்த சதி என்றும், தமிழக மக்கள் இதை ஏற்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
திமுக - காங்கிரஸ் இடையே நடந்த இழுபறி
இதையடுத்து, திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு, கூட்டணி ஆட்சி முழக்கங்கள் மங்கின. காங்கிரஸ் குழு உடனான பேச்சுவார்த்தையின்போது, காங்கிரஸ் கேட்ட எண்ணிக்கையை ஏற்காத திமுக, 27 தொகுதிகள் வரை கொடுக்கலாம் எனக் கூறியது.
ஆனால், காங்கிரஸ் தரப்போ 30க்கு கீழே குறையத் தயாராக இல்லை. ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் டெட் லைன் நெருங்கிய நிலையில், காங்கிரஸ் உடன் பங்கீட்டை முடித்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காங்கிரஸ் முரண்டு பிடித்தால், அவர்கள் விரும்புவதைச் செய்யட்டும் என்ற முடிவுக்கே வந்துவிட்டது திமுக.
அடங்கிய ஆட்சியில் பங்கு குரல்
சோனியா காந்தி அறிவுறுத்தலின்பேரில், ப.சிதம்பரம், ஸ்டாலினை சந்தித்துப் பேசி கொஞ்சம் சுமூகமான சூழலை ஏற்படுத்தினார். அதன்பிறகே இன்னொரு தொகுதியைக் கூடுதலாகக் கொடுக்கச் சம்மதித்தார் ஸ்டாலின். அப்போதும் காங்கிரஸ் பிடிவாதம் பிடித்த நிலையில், திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவது தற்கொலைக்குச் சமம் என முன்னணி நிர்வாகிகள் அறிவுரை கூறியதை அடுத்து காங்கிரஸ், 28 + 1 ராஜ்யசபா சீட்டுக்கு ஒப்புக்கொண்டது.
இப்போது, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சே இல்லை. திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டபோது, காங்கிரஸ் கட்சியினர் இடையேயே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. கூட்டணி ஆட்சி எனப் பேசி பேசி திமுகவை சீண்டி வருவதால் திமுக அப்செட்டில் உள்ளது என காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பேசி உள்ளனர்.
அண்மையில் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடமே புகார் வாசித்தார். இதையடுத்து, தலைமையின் அறிவுறுத்தலும் வந்ததால் இப்போது, ஆட்சியில் பங்கு என்ற குரல் காங்கிரஸில் அடங்கி உள்ளது.
நேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மாணிக்கம் தாகூர், "தனி நபர்களிடையே வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் கட்சி என்பது அனைவரையும் விடப் பெரியது. தலைமை முடிவு செய்யும்போது, அதை ஒழுக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால் ஒற்றுமையே நமது மிகப்பெரிய பலம்" எனப் பதிவிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications