காங்கிரஸுக்கு தன் வாக்குகளை கூட்டணிக்கு மாற்றும் பலம் இல்லை! கழற்றி விட்டுடலாம்.. திமுகவினர் ஆதங்கம்
சென்னை: ஆட்சியில் பங்கு கேட்டு மாணிக்கம் தாகூர் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதேபோல விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கலாம் என்றும் காங்கிரசார் பேசி வருகின்றனர். இப்படி இருக்கையில், காங்கிரஸுக்கு தன் வாக்குகளை கூட்டணிக்கு மாற்றும் பலம் இல்லை. எனவே, கூட்டணியில் இருந்து அக்கட்சியை கழற்றி விட்டுடலாம் என திமுகவினர் பேச தொடங்கியிருக்கின்றனர்.
இன்று மதுரையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தலைமையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அவர், "நாங்கள் கேட்பதெல்லாம் மரியாதையும் அன்பையும்தான். திமுக அமைச்சர்கள் பேசுவது வலியை கொடுக்கிறது. ராகுல் காந்தி தமிழக முதலமைச்சரை சகோதரர் என்று அழைக்கிறார்.

மாணிக்கம் தாகூரின் பேச்சு
அதேபோல எங்களுக்கும் மரியாதை வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அமைச்சர்கள் காங்கிரஸை வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும் என்று கூறுகிறார்கள். கூட்டணி குறித்து அசால்ட்டாக பேசுகிறார்கள். இதெல்லாம் வலியை கொடுக்கிறது.
நாங்கள் உங்களோடு இருந்து நீங்கள் செய்த தவறுகளுக்காக பழைய சுமந்தவர்கள். எங்களை பொறுத்தமட்டில் நாங்கள் கேட்பதெல்லாம் மரியாதை மட்டும்தான். திமுக மாவட்ட செயலாளர் தளபதி பேச்சு வருத்தமளிக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 20 நாட்கள் ஆகிவிட்டது. தற்பொழுதும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மற்ற மாவட்ட செயலாளர்களும் பேசுகிறார்கள். இதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பவன் நான் கிடையாது" என்று கூறியிருந்தார்.
தவெகவுடன் போகிறார்களாம்
அதேபோல இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் நிர்வாகி, "ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதை மீண்டும் கேட்கிறோம். இல்லையென்றால், விஜய் கூட்டணி இருக்கிறது. வெற்றியோ, தோல்வியோ பார்த்துவிடுவோம்" என்று கூறியிருந்தார். இவர்களை எல்லாம் பேச வைத்து காங்கிரஸ் தலைமை வேடிக்கை பார்க்கிறது என்று உடன் பிறப்புகள் விமர்சித்திருக்கின்றனர்.
எதுக்கு கூட்டணி?
குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் வாக்கு பரவலாக கிடையாது. சில தொகுதிகளில் மட்டுமே இருக்கிறது. அங்கும் கூட, அக்கட்சியின் வாக்குகள் சரிந்து, அதற்கு பதில் பாஜகவின் வாக்கு வங்கி உயர்ந்திருக்கிறது. மட்டுமல்லாது தனக்கு செல்வாக்கு உள்ள இடங்களில், அக்கட்சி கூட்டணிக்காக தன்னுடைய வாக்குகளை மடைமாற்றி விடுவதில்லை என்று உடன் பிறப்புகள் விமர்சனங்களை அடுக்குகின்றனர்.
கடந்த 2021 தேர்தலில், கன்னியாகுமரி, நாகர்கோவில், ஆலங்குளம் உள்ளிட்ட பல தொகுதிகளில் திமுக தோல்வியடைய , இந்த வாக்குப் பரிமாற்றமின்மை மிக முக்கியம் என்றும் திமுகவினர் கூறுகின்றனர்.
காங்கிரஸ் செல்வாக்கு பெற்ற தொகுதிகள்
கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸுக்கு செல்வாக்கு இருந்தது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக vs அதிமுக என களம் இருந்தபோது, தனது வாக்குகளை திமுகவுக்கு மாற்ற காங்கிரஸ் தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாகவே, திமுக வேட்பாளரை தோற்கடித்து அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் வெற்றி பெற்றார் என்று உடன் பிறப்புக்கள் கூறுகின்றனர்.
தோற்றுப்போன திமுக
அதேபோல நாகர்கோவில் தொகுதியை எடுத்துக்கொண்டால், இங்கு பாஜக vs திமுக என நேரடி போட்டி நிலவியது. இருப்பினும் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றது. இங்கும் காங்கிரஸ் ஒழுங்காக பணியாற்றவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
உதவாத காங்கிரஸ்
அதேபோல ஆலங்குளம் தொகுதியில் திமுக vs அதிமுக என போட்டி இருந்தது. அதிலும் திமுக வெற்றிப்பெறவில்லை. இந்த தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு செல்வாக்காக இருந்தாலும் கூட, திமுகவை வெற்றி பெற செய்ய இந்த செல்வாக்கு உதவவில்லை என்பதே விமர்சனம். இப்படி இருக்கும் கட்சியுடன் எதுக்கு கூட்டணி வைக்க வேண்டும் என்று திமுகவினர் தலைமையை கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications