60 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. தவெக அரசில் 'குளச்சல் தாரகை' அமைச்சராகிறார்?
சென்னை: தவெக அரசில் விஜய் தலைமையில் உருவாகும் புதிய அமைச்சரவையில் காங்கிரஸிற்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. அந்த ஒரு இடத்தை நிரப்பப்போகும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த பத்து ஆண்டுகளாக நீடித்து வந்த மிக வலுவான ஒரு கூட்டணி இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் இடையிலான உறவு அதிகாரப்பூர்வமாக முறிந்துள்ள நிலையில், தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பமாக தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் கைகோர்த்துள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசியல் களத்தில் ஆறு தசாப்தங்களாக நிலவி வந்த ஒரு பெரிய இடைவெளி தற்போது முடிவுக்கு வரவுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அமைக்கவுள்ள புதிய அரசில் , இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு இடமளிக்கப்பட உள்ளது. இதன் மூலம், சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 'ஆளுங்கட்சி' அந்தஸ்துடன் அமைச்சரவையில் அமரப் போகிறது.
காமராஜர் காலத்திற்குப் பிறகு ஒரு மைல்கல்:
1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் மேலோங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக் கட்டிலில் இடம்பிடிக்க முடியாமல் இருந்தது. பெருந்தலைவர் காமராஜர் மற்றும் எம். பக்தவத்சலம் ஆகியோரின் காலத்திற்குப் பிறகு, காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் தமிழக அமைச்சரவையில் இடம்பெறவில்லை. தற்போது தவெக-காங்கிரஸ் கூட்டணி அமைந்திருப்பதன் மூலம், இந்த நீண்டகால அரசியல் வரலாற்று இடைவெளி முறியடிக்கப்பட உள்ளது.
அமைச்சராகும் 'குளச்சல் தாரகை'?:
தவெக அரசில் விஜய் தலைமையில் உருவாகும் புதிய அமைச்சரவையில் காங்கிரஸிற்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. அந்த ஒரு இடத்தை நிரப்பப்போகும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், குளச்சல் தொகுதியில் வென்ற காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பெர்ட் (Tharahai Cuthbert) பெயர் பலமாக அடிபடுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர், மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1957-62 காலக்கட்டத்தில் காமராஜர் அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சராகப் பொறுப்பு வகித்த லுார்தம்மாள் சைமன் அவர்களின் அதே மண்ணிலிருந்து வந்தவர் தாரகை கத்பெர்ட். 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு காங்கிரஸ் பெண் பிரதிநிதி அமைச்சரவையில் இடம்பெறுவது, சமூக நீதி மற்றும் பெண் அதிகாரமளித்தலுக்குச் சான்றாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் புதிய மாற்றத்தை விரும்புவோரின் ஆதரவுடன் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், காங்கிரஸின் இந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
"மக்களின் தீர்ப்பு மதச்சார்பற்ற அரசை நோக்கியது. அந்தப் பொறுப்பை உணர்ந்து தவெக அரசுக்கு நாங்கள் நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்குகிறோம். இது வெறும் ஆதரவு மட்டுமல்ல, தமிழகத்தின் நலனுக்காக இரு கட்சிகளும் இணைந்து செயல்படும் ஒரு புதிய தொடக்கம்," என காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, மீண்டும் அமைச்சரவையில் இடம் பெறுவது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஒரு பெண் அமைச்சராக தாரகை கத்பெர்ட் நியமிக்கப்பட்டால், அது மீனவ மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றவும், தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு வலு சேர்க்கவும் உதவும் என நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications