நீட் மறுத்தேர்வு.. மொத்த பலத்தையும் இறக்கிய மத்திய அரசு! இந்த முறையாச்சும் பிரச்சனை இல்லாம நடக்குமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட்-யுஜி 2026 மறுதேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், வினாத்தாள் கசிவு இல்லாத மற்றும் நேர்மையான தேர்வை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. என்னதான் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இந்த முறையாவது நீட் தேர்வு பிரச்சனை இல்லாமல் நடக்குமா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு நாளை மறுதேர்வு நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 இடங்களிலும் சுமார் 22.79 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.

NEET re-exam

பலத்த பாதுகாப்பு

வினாத்தாள் கசிவு குறித்து எதிர்க்கட்சிகள், மத்திய அரசை வறுத்தெடுத்திருக்கின்றன. எதிர்க்கட்சிகளை தாண்டி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்கிற அமைப்பு நடத்திய மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பெற்றோர்களும், மாணவர்களும் பெரிய அளவில் பங்கெடுத்திருந்தது பாஜகவுக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.

சிக்கலில் மத்திய அரசு

எனவே, கடந்த முறைபோல இந்த முறை எந்த ஏழரை சம்பவமும் எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. இதற்காக, வினாத்தாள்களைப் பாதுகாக்க பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. வினாத்தாள்கள் ஜிபிஎஸ் (GPS) வசதி கொண்ட வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன. தேர்வு மையங்கள் அனைத்தும் சிசிடிவி (CCTV) கேமராக்கள், ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு அமைப்புகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

2 லட்சம் பேர்

நகர ஒருங்கிணைப்பாளர்கள், பார்வையாளர்கள், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் என நாடு முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் காலை 11:00 மணி முதல் மதியம் 1:30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மதியம் 1:30 மணிக்கு தேர்வு மைய நுழைவு வாயில்கள் மூடப்படும். தேர்வு மதியம் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை நடைபெறும்.

விமானப்படை விமானங்கள்

இந்த பாதுகாப்பு நடவடிக்கையின் ஹைலைட் என்னவெனில், நீட் வினாத்தாள்களை கொண்டு செல்ல இந்திய விமானப்படை விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான்.

கடந்த 4 நாட்களில், இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் 200-க்கும் மேற்பட்ட பயணங்களை மேற்கொண்டு, வினாத்தாள்கள் 18 முக்கிய விநியோக மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சாலை மார்க்கமாக வினாத்தாள்களைக் கொண்டு செல்வதில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்க எடுக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டரில் வந்த வினாத்தாள்

டெல்லியில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட வினாத்தாள்கள், அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பலத்த பாதுகாப்புடன் திருநெல்வேலிக்குக் கொண்டு செல்லப்பட்டன. வினாத்தாள்கள் அந்தந்த மையங்களை அடைந்ததும், அவற்றின் பாதுகாப்புப் பொறுப்பு மத்திய பொது பாதுகாப்புப் படை (CRPF) மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (CISF) வசம் ஒப்படைக்கப்பட்டது.

டெலிகிராம் கட்டுப்பாடு

அதேபோல டெலிகிராம் அப்ளிகேஷனுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. போலி வினாத்தாள்கள் மற்றும் வதந்திகள் பரவுவதைத் தடுக்க, ஜூன் 22-ம் தேதி வரை டெலிகிராம் செயலிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

புதிய புகார்கள்

என்னதான் இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும், நீட் வினாத்தாள் மீண்டும் லீக் ஆகிவிட்டது என வதந்திகள் பரவி வருகின்றன. இந்தத் தகவல்களைத் தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக மறுத்துள்ளது. வினாத்தாள் கசிந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று அது தெரிவித்துள்ளது. இதையடுத்து தேர்வுக்கான முன்னேற்பாடுகளைச் சரிபார்க்க, இன்று மதியம் 1:30 மணியளவில் அனைத்து தேர்வு மையங்களிலும் ஒத்திகை நடைபெறுகிறது.

இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம்தான் என்றாலும், இந்த முறையாவது தேர்வு பிரச்சனையில்லாமல் நடக்க வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் வலியுறுத்துகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+