நெல்லையில் அரசுக்கு 1.92 கோடி வருவாய் இழப்பு .. திமுக பேரூராட்சி தலைவருக்கு 3 ஆண்டு சிறை
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பி.சி.ராஜன். இவர் களக்காடு தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருக்கிறார். அத்துடன் களக்காடு நகராட்சி துணைத்தலைவராக உள்ளார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலும் களக்காடு பேரூராட்சி தலைவராக இருந்தார். அப்போது தனிநபர் ஒருவர் அந்த பகுதியில் 7.25 ஏக்கர் நிலத்தில் வீட்டுமனைகள் அமைத்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்.
மலை சார்ந்த பகுதியில் இருந்த அந்த 7.25 ஏக்கர் நிலத்திற்கு, சட்டப்படி கட்டாயமாகப் பெற வேண்டிய பல்வேறு அரசுத் துறை அனுமதிகளையும், மனைப்பிரிவு ஒப்புதல்களையும் பெறாமலேயே அனுமதி தந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் டிடிசிபி விதிமுறைப்படி, வீட்டுமனைப் பிரிவுகளில் 10 சதவீத நிலத்தைப் பூங்கா அல்லது பொதுப்பயன்பாட்டிற்காகப் பேரூராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும். அதை அந்தத் தனிநபர் ஒப்படைக்காத நிலையிலும், பி.சி.ராஜன் முறைகேடாக ஒப்புதல் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அடுக்கடுக்கான விதிமுறை மீறல்களால் அரசுக்குச் சுமார் ரூ.1 கோடியே 92 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் பிசி ராஜன் மீது புகார்கள் எழுந்தது,

இது தொடர்பாக நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் எழுந்தது. இதன் அடிப்படையில் போலீசார் கடந்த 14.3.2016 அன்று களக்காடு பேரூராட்சி தலைவராக இருந்த பி.சி.ராஜன் மற்றும் செயல் அலுவலராக இருந்த முத்துகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங், ஏட்டு முருகன் ஆகியோர் தீவிரமாக செயல்பட்டு சுமார் 24 சாட்சிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இந்த வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்தார். இதில், பி.சி.ராஜன், முத்துகுமார் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.31 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாரத ரத்னா ஆஜரானார்.
பொதுவாக நீதிமன்றத்தால் இந்த லே-அவுட் அனுமதி முறைகேடானது என்று தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டதால், அங்கு நிலம் வாங்கியவர்களின் மனைகள் அனைத்தும் "அங்கீகாரமற்ற நிலங்களாக" மாற வாய்ப்புகள் அதிகம் ஆகும். அரசுக்கு முறையான 10 சதவீத பொது நிலம் ஒதுக்கப்படாததாலும், துறை அனுமதி இல்லாததாலும், அங்கு மேற்கொண்டு பத்திரப்பதிவு செய்வதிலோ அல்லது வீடு கட்டுவதற்குப் பஞ்சாயத்து/நகராட்சி அனுமதி வாங்குவதிலோ நிலம் வாங்கியவர்களுக்குப் பெரும் சட்டச் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. : பேரூராட்சிக்குச் சொந்தமாகப் பொது நிலம் கைமாறாததால், அந்தப் பகுதிக்குச் சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் இணைப்பு போன்ற அரசு சார்ந்த பொது உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருவதில் சிக்கலும் ஏற்படும்.














Click it and Unblock the Notifications