திடீரென மயங்கி விழுந்த கிரிஷ் சோடங்கர்.. கைத்தாங்கலாக தூக்கி வந்த காங்கிரஸ் நிர்வாகிகள்!
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று திடீரென மயக்கம் அடைந்தார். காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை தூக்கி வந்து, வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் ராஜ்யசபா எம்.பி ஆகிறார். எந்தெந்த சட்டசபை தொகுதிகள் என்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்பட தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 28 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகள் எவை? எந்தெந்த தொகுதிகளை கேட்டுப் பெறலாம்? என்பது குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை பிரசாரத்திற்காக எப்போது அழைத்து வரலாம்? என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பும் நடந்தது. அதன்பிறகு கட்சி சார்பாக அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரிஷ் சோடங்கர் பங்கேற்றார். அதனை முடித்துவிட்டு, அலுவலகத்தின் மேல் தளத்தில் இருந்து கீழே இறங்கியபோது படிக்கட்டில் திடீரென கிரிஷ் சோடங்கர் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை கட்சி நிர்வாகிகள் தூக்கினர். இதனையடுத்து அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மயங்கி விழுந்த சம்பவம் சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications