ராகுல் வரலைன்னா.. பெரிய சிக்கலாகிடும்.. டெல்லியில் பதறிய தமிழக காங்கிரஸ் தலைகள்! என்னாச்சு?
சென்னை: தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளின் பொறுப்பாளர் களுடனான ஆலோசனைக் கூட்டம், தேர்தல் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் தலைமையில் நேற்று நடந்தது. மேலிட பொறுப்பாளர் கிருஸ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கும் வேளையில், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியின் 'கெமிஸ்ட்ரி' முன்பைப் போல இல்லை என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

தொகுதிப் பங்கீட்டில் தொடங்கிய இழுபறி, 'அதிகாரப் பகிர்வு' என்ற ஒற்றை வார்த்தையில் முட்டி நிற்கிறது. "ஆட்சியில் பங்கு வேண்டும்" எனத் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் குரலெழுப்ப, "அப்படி ஒரு பேச்சிற்கே இடமில்லை" எனத் விஜய் கறார் காட்டியது டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலோட்டமாகப் புன்னகைத்தாலும், உள்ளுக்குள் புகைச்சல் எரிந்துகொண்டுதான் இருக்கிறது என்கின்றன சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள்.
இந்த விரிசலுக்குக் கூடுதல் வலு சேர்ப்பது போல அமைந்தது ராகுல் காந்தியின் மௌனம். நாடாளுமன்றத் தேர்தலில் ஊர் ஊராகச் சுற்றிய ராகுல், இந்த முறை தமிழகக் கரையைத் தொடக்கூட ஆர்வம் காட்டவில்லை. புதுச்சேரி வரை வந்தவர், பக்கத்து மாநிலமான தமிழகத்திற்குள் எட்டிப்பார்க்காமல் சென்றது அறிவாலயத்தைச் சுணக்கமடையச் செய்துள்ளது. "நேரம் இல்லை" என்ற ஒற்றை வரியோடு ராகுல் தரப்பு ஒதுங்கிக்கொண்டது, "கூட்டணிக்குள் எல்லாம் சரியில்லை" என்பதற்கான மிகப்பெரிய குறியீடாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று கூட்டத்தில் பேசிய முகுல்வாஸ்னிக், காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்தார். பொறுப்பாளர்கள் பலரும் தங்களின் தொகுதிகளில் இருக்கும் பிரச்சனைகள், சமூக கட்டமைப்புகளால் நிலவும் அரசியல், வேட்பாளர்கள் மீதான அதிர்ப்திகள் என தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை விவரித்தார்கள். அதேசமயம், திமுக எனும் ஆலமரம் நம்முடன் இருப்பதால் வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால், பொறுப்பாளர்கள் சிலர், ''சீட் எண்ணிக்கை, தொகுதிகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பிரச்சனைகளில் திமுக தலைமையிடம் நாம் முரண்பட்டதால், திமுக நிர்வாகிகளிடம் நம் மீது ஒரு வெறுப்பு இருக்கிறது. இதனை களத்தில் நாங்கள் கண் கூடாகப் பார்த்திருக்கிறோம். பிரச்சாரத்திற்கு அவர்கள் ஒத்துழைப்பதில்லை. வறுபுறுத்தி வலியுறுத்தி தாஜா பண்ணியதற்கு பிறகு லோக்கல் திமுகவினர் நம்முடன் கைக்கோர்க்கிறார்கள். ஆனால், அது கூட முழுமையாக நம்மை ஆதரிக்கும் மன நிலையில் இருப்பது போல தெரியவில்லை.
அதனால், நம் தலைவர் ராகுல்காந்தியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரச்சாரத்தை முன்னெடுத்தால் அது திமுகவின் கடை கோடி தொண்டர்களுக்கும் ஒரு மெசேஜ் சொன்னது போல் போய்ச் சேரும். ஆனால், இதற்கான முயற்சியை தலைவர்கள் எடுத்தது போலத் தெரியவில்லை'' என்று களத்தில் இருக்கும் சிக்கல்களை அழுத்தமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
அதற்கு பதில் சொன்ன முகுல்வாஸ்னிக், ''நீங்கள் சொல்லும் பிரச்சனைகளை ஏற்கனவே எங்களின் கவனத்துக்கு வந்திருக்கிறது. ராகுல்ஜிக்கும் இந்த விபரங்கள் எல்லாம் தெரியும். முதல் கட்ட தேர்தல் நடந்த மாநிலங்களில் கவனம் செலுத்த வேண்டியதிருந்ததாலும், பார்லிமெண்ட் செசன்ஸ் நடந்து கொண்டிருந்ததாலும் தமிழ் நாட்டிற்கு கடைசி கட்டத்தில் செல்லலாம் என ராகுல்ஜி யோசித்தார். அதுதான் இந்த டிலேக்கு காரணம்.
இந்த வாரத்தில் ராகுல்ஜி தமிழகத்துக்கு வருவார். குறிப்பிட்ட 3 பாயின்உகளில் அவர் மட்டும் பேசுவதாக ஒரு திட்டமும், ஸ்டாலினுடன் சேர்ந்து ஒரு பொது கூட்டத்தில் இணைந்து பிரச்சாரத்தை செய்வதற்கேற்ப ஒரு திட்டமும் என 2 திட்டங்கள் ராகுல்ஜியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஸ்டாலினுடன் இணைந்து பிரச்சாரம் செய்வது குறித்து திமுகவிடம் நேரம் கேட்கப்பட்டிருக்கிறது. திமுக தலைமையிடமிருந்து தேதி கிடைத்ததும் ராகுல்ஜியின் தமிழக வருகை முடிவு செய்யப்படும். ஓரிரு நாளில் இதனை இறுதி செய்து விட்டு சொல்கிறோம்'' என்று தெரிவித்திருக்கிறார் முகுல்வாஸ்னினிக்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications