மார்கழியில் பொங்கலா? என்ன கொடுமை இது? மதுரையில் மோடி பங்கேற்கும் விழாவை சாடும் காங்கிரஸ்!
சென்னை: ஜனவரி 12-ம் தேதி மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ள நிலையில், மார்கழியில் பொங்கலா என வினவியிருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர்.
ஜனவரி 14-ம் தேதி தை மாதம் முதல் நாளை தான் பொங்கல் விழாவாக உண்மை தமிழன் கொண்டாடுவான் எனவும் மாணிக்கம் தாகூர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருக்கிறார்.
நவராத்திரிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் குஜராத்தில் இப்படி விழா நடக்குமா எனவும் பாஜகவுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மோடி பொங்கல்
ஜனவரி 12-ம் தேதி 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி விருதுநகர் வருகிறார். முன்னதாக மதுரை விமான நிலையம் வரும் அவர், அங்கு மண்டேலா நகரில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்படும் பொங்கல் விழாவில் கலந்துகொள்கிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், மார்கழியில் பொங்கலா? என வினவியுள்ளார்.

மார்கழியில் பொங்கல்?
அதாவது தை மாதம் பிறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர் இந்த பொங்கல் விழா நடத்தப்படுவதால் அதை இப்படி விமர்சித்திருக்கிறார் மாணிக்கம் தாகூர் எம்.பி. மேலும், ஜனவரி 14-ம் தேதி தை மாதம் முதல் நாளை தான் பொங்கல் விழாவாக உண்மை தமிழன் கொண்டாடுவான் என்றும் சங்கிகள் பொங்கலை கூட மோடி பெயரில் கொண்டாடுவது அவலம் எனவும் மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருக்கிறார்.

பாஜகவுக்கு கேள்வி
மேலும், நவராத்திரிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் குஜராத்தில் இப்படி விழா நடக்குமா எனவும் அதுவும் மோடி பெயரில் நவராத்திரி எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதேபோல் மோடி பெயரில் விஜயதசமி விழா நாக்பூரில் நடக்குமா என்றும் பிறகு ஏன் தமிழர்கள் விழாவுக்கு மட்டும் இந்த அவமதிப்பு எனவும் சாடியிருக்கிறார் மாணிக்கம் தாகூர் எம்.பி. மார்கழியில் இசைவிழா நடத்தினால் வரவேற்கிறேன் எனவும் பாஜகவுக்கு தெரிவித்திருக்கிறார் மாணிக்கம் தாகூர் எம்.பி.

கடந்த ஆண்டு
மாணிக்கம்தாகூரின் டிவிட்டர் பதிவை மையமாக வைத்து பாஜக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே மதுரை மண்டேலா நகரில் பிரம்மாண்ட முறையில் பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது தமிழக பாஜக. கடந்தாண்டு தை முதல் நாள் அன்று ராகுல்காந்தி மதுரைக்கு வந்து ஜல்லிக்கட்டை கண்டதுடன் பொங்கல் விழாவிலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications